எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்க முற்படுவதா? சீமான் கண்டனம்

எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் தமிழக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்க முற்படுவதா? சீமான் கண்டனம்

எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் தமிழக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வடசென்னை, எண்ணூரில் 660 மெகாவாட் திறன்கொண்ட புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் தமிழக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. சூழலியல் சீர்கேட்டை விளைவித்து, காலநிலை மாற்றத்திற்குக் காரணமாக அமையும் வகையிலான இத்திட்டத்தைச் செயல்படுத்த முனைவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. மக்களின் விருப்பத்திற்கும், மண்ணின் நலனுக்குமெதிரான அனல் மின்நிலையத் திட்டத்தை வலுக்கட்டாயமாகத் திணிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அண்மையில் க்ளாஸ்கோவில் நடைபெற்ற Cop26ல் நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி, எரிவாயு உற்பத்தி ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பது மட்டுமே புவி வெப்பமடைவதை குறைக்கவும், பருவநிலை மாற்றத்தை தடுக்கவும் உதவும் என்று அறிவிக்கப்பட்டு, அது அனைவராலும் ஏற்கப்பட்டது. இந்தியாவும் நிலக்கரி சார்ந்த ஆற்றல் உற்பத்தியைப் படிப்படியாகக் குறைப்பதற்கு உறுதி ஏற்றது. இந்நிலையில் மாற்று மின்சார ஆற்றல் உற்பத்தி முறைகளைத்தான் அரசு கையாண்டிருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு, மேலும் நிலக்கரி சார்ந்த அனல்மின் நிலையங்களை விரிவாக்குவது அல்லது புதிதாகத் தொடங்குவது சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தினை தடுப்பதற்கும் எந்த விதத்திலும் உதவாது.

முன்னதாக, இத்திட்டத்திற்கான மக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் வரும் ஜனவரி 6 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு அரசு தரப்பு இத்திட்டத்தில் இருக்கக்கூடியச் சிக்கல்களை முன்வந்து ஆராய வேண்டும். சூழலியல் அபாயகரமானப் பெரும் திட்டங்களுக்காக நடத்தப்படும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் வெறும் கண்துடைப்பென மாறி நிற்கும் வேளையில், மண்ணுக்கோ, மக்களுக்கோ பெரும் கேடாக அமையப்போகிற இத்திட்டம் கருத்துக்கேட்புக்கூட்டம்வரை கொண்டு செல்லப்படக்கூடாது என்றும், அனல் மின்நிலையத் திட்டத்தினை உடனடியாகவும், முழுவதுமாகவும் கைவிட தமிழக அரசு முன்னேற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். 

அதற்கு நேர்மாறாக, இத்திட்டம் முன்நகர்ந்தால் இதன் தீயவிளைவுகளை எடுத்துரைத்து, மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி மிகத்தீவிரமாகப் போராடுமெனப் பேரறிவிப்பு செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com