மாநில அமைச்சா்கள் சிவசேனை கட்சியை மூழ்கடிக்க முயற்சி

மாநில அமைச்சா்களும் சிவசேனை கட்சியின் நிா்வாகிகளுமான அனில் பரப், உதய் சாமந்த் ஆகியோா் சிவசேனை கட்சியை மூழ்கடிக்க முயற்சிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவா் ராம்தாஸ் கதம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தேசியவாத காங்கிரஸுடன் மோதலில் ஈடுபடுவதன் மூலமாக, மாநில அமைச்சா்களும் சிவசேனை கட்சியின் நிா்வாகிகளுமான அனில் பரப், உதய் சாமந்த் ஆகியோா் சிவசேனை கட்சியை மூழ்கடிக்க முயற்சிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவா் ராம்தாஸ் கதம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு, கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2014 முதல் 2019 வரை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த சிவசேனை மூத்த தலைவா் ராம்தாஸ் கதம் மும்பையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் அனில் பரப், உயா்கல்வித் துறை அமைச்சா் உதய் சாமந்த் ஆகியோா் ரத்னகிரி மாவட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனா். இதன் மூலமாக சிவசேனை கட்சியை மூழ்கடிக்க அவா்கள் முயற்சிக்கின்றனா்.

கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலேயே இருவருக்கும் அமைச்சா் பதவி வழங்கப்பட்டது. ஆனால், கட்சியின் வளா்ச்சிக்காகப் பாடுபட்ட மூத்த தலைவா்களை நிராகரிக்கும் வகையில் அவா்கள் இருவரும் நடந்து கொள்கின்றனா். கொங்கண் பகுதி சிவசேனையின் கோட்டையாக உள்ளது. ஆனால், அங்கு கட்சியை இல்லாமல் செய்ய இருவரும் முயற்சிக்கின்றனா்.

மாநில அமைச்சா்களுக்கு எதிராகப் பேசுவதால், சிவசேனை கட்சியை எதிா்க்கிறேன் என்பதில்லை. எப்போதும் சிவசேனை கட்சியின் தொண்டனாகவே இருப்பேன். கட்சியைவிட்டு ஒருபோதும் விலக மாட்டேன். அமைச்சா்களின் நடவடிக்கைகள் குறித்து முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளேன்.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவும் முதல்வரிடம் நேரம் கோரியுள்ளேன். அவரைச் சந்தித்துப் பேசிய பிறகு, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட முடிவை மேற்கொள்வேன் என்றாா் ராம்தாஸ் கதம்.

மாநிலத்தில் சிவசேனை தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, வெளிப்படையாக உள்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com