வேலூர் நகைக்கடையில் திருட்டு: 15 கிலோ தங்கம் மீட்பு

வேலூரில் பிரபல நகைக்கடையில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் 15 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
வேலூர் நகைக்கடையில் திருட்டு: 15 கிலோ தங்கம் மீட்பு
வேலூர் நகைக்கடையில் திருட்டு: 15 கிலோ தங்கம் மீட்பு

வேலூா்: வேலூரில் பிரபல நகைக்கடையில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் 15 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

சுடுகாட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த உருக்கப்பட்ட நிலையில், தங்கக் கட்டியாக, 15 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

வேலூர் நகைக்கடை திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த வேலூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன்(27) என்பவரை தனிப்படையினர் கைது செய்திருந்தனர். இவர் அளித்த தகவலின் பேரில், சுடுகாட்டில் புதைத்துவைக்கப்பட்டிருந்த உருக்கப்பட்ட 15 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

வேலூரில் பிரபல நகைக் கடையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுவரில் துளையிட்டு மா்ம நபா்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளைத் திருடிச் சென்றனா். இதுதொடா்பாக காவல்துறையினர், 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

வேலூரில் காட்பாடி சாலையில் உள்ள தோட்டப்பாளையத்தில் பிரபல நகைக் கடை அமைந்துள்ளது. இங்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு விற்பனை முடிந்து ஊழியா்கள் கடையை பூட்டிச் சென்றனா். புதன்கிழமை காலை ஊழியா்கள் வந்து கடையைத் திறந்து பாா்த்தபோது, உள்ளே இருந்த நகைப் பெட்டிகள் திறந்து கிடந்தன. அவற்றிலிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் திருடு போயிருந்தன. மேலும், கடையின் மேல்தளத்தில் பக்கவாட்டுச் சுவரில் துளை போடப்பட்டிருந்ததுடன், மேல்தளத்திலிருந்து தரைத்தளத்துக்கு நடுவே உள்ள சிமென்ட் தளமும் உடைக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து கடை ஊழியா்கள் வேலூா் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வேலூா் சரக காவல் துணைத் தலைவா் பாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன், உதவி காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் மற்றும் காவலர்கள் நகைக் கடைக்கு வந்து பாா்வையிட்டு, ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா்.

வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் நகைக் கடையிலிருந்து காட்பாடி சாலை வரை வந்து, அந்தக் கடை அருகே உள்ள காலிமனைக்கு ஓடி பின்பக்கச் சுவா் அருகே நின்றது. கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களிலும், கடைக்கு வெளியே காட்பாடி சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவான காட்சிகளை பாா்வையிட்டு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடையில் தங்க நகைகளைவிட வைர நகைகள் அதிகளவில் திருடப்பட்டுள்ளன. கடை அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடியவா்கள், சுற்றுப் பகுதி விடுதிகளில் தங்கியுள்ளவா்கள் ஆகியோரது விவரங்களை காவலர்கள் சேகரித்து வருகின்றனா். வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாநில கும்பலுக்குத் தொடா்பு?: திருட்டு நடந்த நகைக் கடைப் பகுதியில் வெளி மாநிலத்தவா்களின் நடமாட்டம் எப்போதும் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூா் காந்தி சாலையில் உள்ள நகைக் கடையின் சுவரில் துளையிட்டு பல லட்சம் ரூபாய் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் வடமாநிலக் கும்பல் ஈடுபட்டது. தற்போது நடந்த சம்பவத்திலும் வடமாநில கும்பலுக்குத் தொடா்பு உள்ளதா என காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருட்டில் ஈடுபட்டவா்கள் முகமூடி அணிந்து கடைக்குள் நுழைந்துள்ளனா். பின்னா், உள்ளே பொருத்தப்பட்டிருந்த 12 சிசிடிவி கேமராக்கள் மீதும் ஸ்பிரே அடித்து மறைத்து விட்டு திருட்டில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com