
சண்முகநாதன் / மு.க.ஸ்டாலின்
அன்புள்ளம் கொண்ட சண்முகநாதனை சீக்கிரமாக இழப்போம் என்று நினைக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அண்ணன் என்ற உறவையும் தாண்டி, அவரை எனது உயிராகத்தான் நான் கருதி வந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், எப்போது எந்தக் கூட்டத்தில் நான் பேசினாலும், பேசி முடித்ததும் அவருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். 'நேரலை பார்த்தீங்களா?' என்று அவரது கருத்தைக் கேட்பேன்.
எனது பேச்சை பாராட்டுவார், திருத்தம் சொல்வார், உற்சாகப்படுத்துவார், தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவார். அத்தனையிலும் அவரது அன்பும், என் மீதான பாசமும், தலைவர் கலைஞர் மீதான மரியாதையும்தான் பொங்கி வரும்.
உதவியாளர், செயலாளர் என்பதையெல்லாம் தாண்டி தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் சண்முகநாதன் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களுக்கு இன்னொரு கையாக இருந்தவர்.
கலைஞர் மறைந்த பிறகும், அவர் இருந்த காலத்தில் கோபாலபுரம் வீட்டுக்கு எப்படி வருவாரோ அதேபோல் வந்து எழுதுவது, அச்சிடுவது, மெய்ப்புத் திருத்தம் செய்வது என இருப்பார். தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய அனைத்துக் கடிதங்களையும் பல்வேறு தொகுதிகளாகத் தொகுத்து வெளியிடும் அரிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்தப் பிறவி தலைவருக்கானது' என வாழ்ந்த பாசச் சகோதரனை இழந்திருக்கிறோம். 'அவர் இல்லாமல் நான் இல்லை' என்று வாழ்ந்த அன்பு மனிதரை இழந்திருக்கிறோம்.
யாருக்கு நான் ஆறுதல் சொல்வது? என்னை நானே ஆறுதல் சொல்லிக் கொள்ளத்தான் வேண்டும். அண்ணன் சண்முகநாதன் குடும்பத்தினர் அனைவர்க்கும் அக்குடும்பத்தின் சகோதரனாக எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.