
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த குட்டி பி.ஏ., எனும் கோ.சண்முகநாதன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (டிச.21) காலமானார். அவருக்கு வயது 80.
கடந்த 1969-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கருணாநிதியின் உதவியாளராகச் சேர்ந்த சண்முகநாதன் தொடர்ந்து 50 ஆண்டுகள் வரை அந்தப் பணியில் இருந்தார்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் அவருடன் இருந்து எழுத்துப் பணியாற்றியவர் கோ.சண்முகநாதன்.
கருணாநிதி எழுதிய 'நெஞ்சுக்கு நீதி' போன்ற முக்கிய புத்தகங்களை எழுத்துப்பூர்வமாக கொண்டுவந்ததில் பெரும்பங்காற்றியவர். கருணாநிதி முதல்வராக இருந்தபோது முக்கிய தலைவர்களை சந்திக்கும் நேரங்களிலும் சண்முகநாதன் கருணாநிதியுடன் இருந்தார்.
'தமிழ் சுருக்கெழுத்து நிருபராக’ தமிழகக் காவல்துறையில் பணியில் இருந்த அவர், எதிர்க்கட்சித் தலைவர்களின் பொதுக் கூட்டங்களுக்குச் சென்று அவர்களின் பேச்சை சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதை அதிகாரிகளுக்கு தட்டச்சு செய்து அனுப்புவார்.
இந்த நிலையில் 1967-ம் ஆண்டு அண்ணாவின் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். சண்முகநாதனின் பணியைப் பற்றி அறிந்திருந்தார் கருணாநிதி. இந்த அறிமுகம், சண்முகநாதனை தமிழக சட்ட மேலவையில் தமிழ்ச் சுருக்கெழுத்தாளராக பணிமாற்றிக் கொள்ளச் செய்தது.
அன்று முதல் சுமார் 48 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக சண்முகநாதன் பணி செய்தார். கருணாநிதியின் குடும்பத்திலும், அவருக்கு நெருக்கமானவர்களாலும் குட்டி பி.ஏ., என்றே அழைக்கப்படுவார்.
அவரது உடலுக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். கோவை சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினும், சென்னை திரும்பியவுடன் அஞ்சலி செலுத்தவுள்ளார்.


