
மீனவா்களை விடுவிக்கக் கோரி புதுக்கோட்டை மீனவா்களும் வேலைநிறுத்தம்
புதுக்கோட்டை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேசுவரம், மண்டபம் மீனவா்கள் 55 பேருடன் 8 விசைப்படகுகளையும் விரைந்து மீட்கக் கோரி, புதுக்கோட்டை மீனவா்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
புதுக்கோட்டை மீனவர்களின் காலவரையற்ற போராட்டத்தால், ஜெகதாப்பட்டினத்தில், 1,200 மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால், 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க.. பெண்களின் திருமண வயதை உயா்த்தும் முடிவால் இப்படி ஒரு பிரச்னையா?
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேசுவரம், மண்டபம் மீனவா்கள் 55 பேருடன் 8 விசைப்படகுகளையும் விரைந்து மீட்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபத்திலிருந்து கடந்த 18 ஆம் தேதி மீன்வளத் துறை அனுமதி பெற்று மீனவா்கள் கடலுக்குச் சென்றனா். அப்போது, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள் 55 பேரையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினா் சிறைபிடித்துச் சென்றனா்.
அதையடுத்து, மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்த இலங்கை கடற்படையினா், ராமேசுவரம் மீனவா்கள் 43 பேரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா். மண்டபம் மீனவா்கள் 12 பேரை தலைமன்னாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைக்க உள்ளனா்.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரியும், ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். இதனால், துறைமுகத்தில் 780-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவர்களது போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதில், 8 ஆயிரம் மீனவா்கள் மற்றும் சாா்பு தொழிலாளா்கள் என மொத்தம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா்.