திருவையாற்றில் ஜன. 18-இல் தியாகராஜ ஆராதனை விழா தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175 ஆம் ஆண்டு ஆராதனை விழா ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமி
சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமி


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175 ஆம் ஆண்டு ஆராதனை விழா ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு திருவையாறு தியாகராஜ ஆசிரமத்தில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற ஸ்ரீ தியாக பிரம்ம சபையின் அறங்காவலர் எஸ். சுரேஷ் மூப்பனார் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

இவ்விழா ஜனவரி 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவை சபைத் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. தலைமையில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் தொடங்கி வைக்கவுள்ளார். தொடர்ந்து ஐந்து நாள்களுக்கு மாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஸ்ரீ தியாகராஜ பெருமான் சித்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளாகிய ஜனவரி 22 ஆம் தேதி தியாகராஜர் ஆராதனை நடைபெறவுள்ளது. இதில்,காலை 5.30 மணிக்கு உஞ்ச விருத்தி பஜனை, 8.30 மணிக்கு நாகசுர இசை, 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனைகள் வைபவம், இரவு 8 மணிக்கு ஸ்ரீ தியாகராஜர் உருவச் சிலை ஊர்வலம் ஆகியவை நடைபெறவுள்ளன. தேசிய நிகழ்ச்சிகள் ஜனவரி 22 ஆம் தேதி இரவு நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளன.

திருவையாறு தியாகராஜ ஆசிரமத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற பந்தல்கால் நடும் நிகழ்ச்சி.

ஆண்டுதோறும் இவ்விழாவில் இரண்டாம் நாள் முதல் நிறைவு நாள் வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக பங்கேற்போர் நலன்கருதி அனைத்து நாள்களிலும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, இவ்விழாவில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கைக்கு மிகாமலும் பங்கேற்க உள்ளனர் என்றார் சுரேஷ் மூப்பனார்.

அப்போது அறங்காவலர்கள், எஸ். கணேசன், எம்.ஆர். பஞ்சநதம், பொருளாளர் ஆர். கணேஷ், உதவிச் செயலர் டி.ஆர். கோவிந்தராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com