
முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில், மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா. ஜான்சிராணி, பி. டில்லிபாபு, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா, மறைந்த ராசாக்கண்ணு மனைவி பார்வதி, முதனை கோவிந்தன், சிதம்பரம் என். பத்மினி ஆகியோர் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது, இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு குடிமனை, சாதிச் சான்று உள்ளிட்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை அறிவித்ததற்கும், நகர்ப்புர மேம்பாட்டு வாரியக் குடியிருப்புக்கு கடந்த ஆட்சி காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட ரூ. 1.50 லட்சம் பணம் செலுத்த வேண்டுமென்ற விதியை ரத்து செய்து சுலப தவணைகளாக மாற்றி உத்தரவிட்டதற்கும் முதல்வருக்கு நன்றியும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க- புதுமைகளின் திருத்தலம் வேளாங்கண்ணி
மேலும், தமிழகத்தல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதை தடுத்திடவும், குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதேபோல, தமிழகத்தில் மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவும், மழை - வெள்ள நிவாரண உதவிகளை உயர்த்தி வழங்குவது, அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது, கரோனா ஊரடங்கு காலத்தில் நுண்நிதி நிறுவனங்களில் பெண்கள் பெற்ற கடன்கள் வசூலிப்பதை தடுத்து நிறுத்துவது, இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் சார்பில் அளிக்கப்பட்டன.