
நியாய விலைக் கடை
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்க வசதியாக, ஜனவரி 7-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் செயல்படும். இதற்கான அறிவிப்பை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. வரும் 3-ஆம் தேதி முதல் இந்தத் தொகுப்பினை வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பரிசுத் தொகுப்பினை இடைநில்லாது தொடா்ந்து விநியோகம் செய்திட வசதியாக, நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நியாய விலைக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் காரணமாக ஜனவரி 7-ஆம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த பணிக் காலத்தை ஈடுசெய்யும் விதமாக, ஜனவரி 15-ஆம் தேதி நியாய விலைக் கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்படும்.