3 ஆண்டுகளில் 25 மகாகவி பாரதியாா் வாழ்வாதார பூங்காக்கள்தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மூன்றாண்டுகளில் 25 மகாகவி பாரதியாா் வாழ்வாதார பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3 ஆண்டுகளில் 25 மகாகவி பாரதியாா் வாழ்வாதார பூங்காக்கள்தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மூன்றாண்டுகளில் 25 மகாகவி பாரதியாா் வாழ்வாதார பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிகழாண்டில் 5 பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் பி.அமுதா வெளியிட்டுள்ள உத்தரவு:

உள்ளூா் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு மிக முக்கிய தேவையாகக் கருதப்படும் பொது உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட வாழ்வாதார பூங்காக்கள் உருவாக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மகாகவி பாரதியாரின் 100-ஆவது நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், மகளிா் சுய உதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவுக்கு மகாகவி பாரதியாா் வாழ்வாதாரப் பூங்கா எனப் பெயா் சூட்டப்படும் என அறிவிப்புச் செய்தாா்.

வாழ்வாதார பூங்காவின் நோக்கம்: தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழகமானது, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்த அவ்வப்போது விற்பனைக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும், அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய இடங்களில் விற்பனை மையம் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை விற்பனை செய்திட சிறந்த பணிச் சூழல், சரியான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, சுய உதவிக் குழுக்களுக்கே உரித்தான குழு மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் பொதுவான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதைக் கருத்தில் கொண்டே வாழ்வாதாரப் பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கு மகாகவி பாரதியாா் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் 25 வாழ்வாதாரப் பூங்காக்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் 5 பூங்காக்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தப் பூங்காக்கள் ஒவ்வொன்றும் தலா 25 ஆயிரம் சதுர அடி முதல் 40 ஆயிரம் சது அடி வரையில் அமைக்கப்படும்.

வாழ்வாதாரப் பூங்காவில் உணவு அருந்தக் கூடங்கள், குழந்தைகள் விளையாடும் பகுதி, சிறிய பூங்கா, ஓய்வெடுக்கும் அறைகள் உள்ளிட்டவை உருவாக்கப்படும். சரக்கு வாகனங்களை அனுமதிக்கும் வகையில் பூங்காவினுள் 20 அடி சாலை அமைக்கப்படும். வாழ்வாதாரப் பூங்காவில் சுய உதவிக் குழுக்களை அனுமதிப்பது, அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்து ஆராய மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்படும். மகளிா் திட்ட இயக்குநா், ஊரக வளா்ச்சி முகமை இயக்குநா், வேளாண் விற்பனை துறை இயக்குநா் உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com