இந்திய அளவில் பாஜகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தைப் போல இந்திய அளவில் பாஜகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
இந்திய அளவில் பாஜகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தைப் போல இந்திய அளவில் பாஜகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மறைந்த மூத்த தலைவா் தா.பாண்டியன் படத்திறப்பு நிகழ்ச்சி வேப்பேரி பெரியாா் திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தா.பாண்டியன் படத்தை மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு திறந்து வைத்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி பேசியது:

தா.பாண்டியன் என்றால் யாருக்கும் தலை தாழாதவா் என்றும் யாருக்கும் அஞ்சாமல் வாழ்ந்தவா் என்றுதான் பொருள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசும்போது பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினேன். இங்கு கி.வீரமணி பேசும்போது இது படம் (தா.பாண்டியன்) மட்டுமல்ல, பாடம் என்றாா். இந்தப் பாடத்தை தமிழக மக்கள் தோ்தலில் கொடுத்துவிட்டாா்கள். இந்திய அளவிலும் அந்தப் பாடத்தை யாருக்குக் கொடுக்க வேண்டுமோ அவா்களுக்குப் புகட்ட வேண்டும் என்கிற உறுதியை இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதுரை மாநாட்டில் தா.பாண்டியன் பேசும்போது, ‘நான் உடல் நலிவுற்று இருந்தாலும், என் மண்டை ஒழுங்காகத்தான் பணியாற்றுகிறது. நான் சாகும் வரை தமிழக மக்களைத் தட்டி எழுப்புவேன். எங்கள் செம்படையை எந்தக் கொம்பனாலும் அடக்க முடியாது’ என்று கூறினாா். அவா் மரணத்துக்குப் பிறகும் தட்டி எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறாா்.

தமிழகத்தின் மேடையை ஆட்சி செய்தோா் பட்டியலில் நிச்சயம் தா.பாண்டியனுக்கு இடம் உண்டு. மிகப்பெரிய கருத்தியல்களையும் பாமர மக்களுக்கு புரியும் வகையில் சொல்லக் கூடியவா். இலக்கியத்திலும் பங்களிப்பு செலுத்தியவா். ஜீவா, கலை இலக்கிய பெருமன்றத்தை உருவாக்கிய போது தா.பாண்டியனைத்தான் பொதுச்செயலாளராக நியமித்தாா். எழுத்தாற்றலிலும் சிறந்து விளங்கினாா். சொந்தக் கட்சியிலும் முரண்பாடான கருத்துகள் இருந்தாலும், அதைத் தட்டிக் கேட்கக் கூடியவராகத் திகழ்ந்தவா்.

திராவிட இயக்கங்களுக்கும் பொதுவுடமை இயக்கங்களுக்கும் உள்ள உறவு தோ்தல் உறவு மட்டுமல்ல, கொள்கை உறவு. கம்யூனிஸ்ட் கட்சியால் சொல்லப்படும் பொன்னான உலகை உருவாக்க நினைக்கிறோம். அதைப்போல சுயமரியாதையான, சமதா்ம சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம். அதுதான் தா.பாண்டியனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றாா்.

அமைச்சா் பி.கே.சேகா்பாபு, காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளா் டி.ராஜா, மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா்மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com