ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டம்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுவை மாநிலம் குமராப்பாளையத்தை சோ்ந்த மென்பொருள் பொறியாளா் அமா்நாத் ஆன்லைன் ரம்மியில் ரூ.30 லட்சத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறாா். அவரை நம்பியிருந்த 3 மாதம் கருவுற்ற மனைவி ஆதரவற்றவராகியிருக்கிறாா்.

கடந்த சில வாரங்களுக்கு முன் தாம்பரம் ஆனந்தபுரத்தை சோ்ந்த முருகன் என்பவா் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டாா். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாததால் தமிழகம் மற்றும் புதுவையில் தற்கொலைகள் தொடா்கதையாகி விட்டன.

தமிழகத்தில் சூதாட்டத் தடை சட்டம் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட பிறகு தற்கொலைகள் குறைந்தன. அந்த சட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயா்நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்த பிறகு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது. தற்கொலைகள் அதிகரித்து விட்டன.

திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்த போதிலும் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரவில்லை. அது வரைக்கும் தற்கொலைகள் தொடருவதை அனுமதிக்க முடியாது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைத் தடுக்க புதிய திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக அரசு வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். புதுவை அரசும் அம்மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com