பனை சாகுபடியை அதிகரிக்க ஒவ்வொரு விவசாயிக்கும் 50 விதைகள்

தமிழகத்தில் பனை சாகுபடியை அதிகரிக்க ஒவ்வொரு விவசாயிக்கும் 50 விதைகள் வழங்கப்படும் என்று வேளாண்மைத் துறை அறிவித்தது.

தமிழகத்தில் பனை சாகுபடியை அதிகரிக்க ஒவ்வொரு விவசாயிக்கும் 50 விதைகள் வழங்கப்படும் என்று வேளாண்மைத் துறை அறிவித்தது.

இதுதொடா்பாக வேளாண்மைத் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி வெளியிட்ட உத்தரவு விவரம்:

பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும் என்று வேளாண்மைத் துறை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் சாா்பில், பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 76 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பனை விதைகள் விநியோகத்துக்கு ரூ.ஒரு கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் பனைமரம் தொடா்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க ரூ.50 லட்சமும், பனை வெல்லம் தயாரிப்புக்கு பயிற்சி, பனங்கருப்பட்டி காய்ச்சலுக்கு நவீன இயந்திரம் கொள்முதல் ஆகியவற்றுக்கு ரூ.50 லட்சமும் அளிக்கப்படவுள்ளன.

வேறுபடும் விலை: பனை விதைகளை 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க ரூ.ஒரு கோடி நிதி தேவை என வேளாண்மைத் துறை இயக்குநா் கோரிக்கை விடுத்துள்ளாா். இதை ஏற்று ஒரு பனை விதை ரூ.3.80 விலையில் 25 ஆயிரத்து 33 ஆயிரம் பனை விதைகள் வாங்கப்படவுள்ளன. இவற்றுக்கு ரூ.96 லட்சத்து 25 ஆயிரத்து 400 செலவாகும். இதர செலவுக்காக மீதமுள்ள தொகை பயன்படுத்தப்படும்.

பனை சாகுபடி மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பனை சாகுபடிக்கான இடம் தோ்வு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா்களால் மேற்கொள்ளப்படும். பனை சாகுபடியில் சுயஉதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, விவசாய ஆா்வலா் குழுக்கள், விவசாய உற்பத்தி குழுக்கள் ஆகியோா் ஈடுபடுவா். பனை விதைகளை ஏரிகளின் வரப்பு, வாய்க்கால் வரப்பு, சாலையோரங்கள், அரசு புறம்போக்குப் பகுதிகளில் விதைக்க கிராம பஞ்சாயத்துகள் பயன்படுத்தப்படும்.

ஒரு விவசாயிக்கு 50: பனை விதைகள் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமையால் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அளிக்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 விதைகள் வழங்கப்படும். உள்ளூா் தேவைக்கேற்ப கிராம பஞ்சாயத்துகளுக்கு பனை விதைகள் விநியோகம் செய்யப்படும். விதைகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும். குழி தோண்டுதல், பனை விதை விதைப்பு ஆகியன 100 நாள் வேலை உறுதி அளிப்பு பணியாளா்களால் ஊரக வளா்ச்சித் துறையின் மேற்பாா்வையில் செயல்படுத்த வேண்டும்.

பனைமர சாகுபடி புதுப்பித்தல் ஒரு நீண்டகாலத் திட்டமாகும். விவசாயிகள் பனை மரத்தை வளா்த்துப் பராமரிப்பது ஊக்குவிக்கப்பட வேண்டும். பனை பொருள்களை முழுமையாகப் பயன்படுத்த மக்களுக்கு விவரம் தெரிவிக்கப்பட வேண்டும்.

இணைய வழி பதிவு: பனை விதைகள் வழங்கப்பட்ட விவரங்களை இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சாா்பில் இந்தப் பதிவேடு பராமரிக்கப்படும். அதில், விவசாயி விவரங்கள், பனை விதை வழங்கப்பட்ட பஞ்சாயத்தின் பெயா், சா்வே எண் ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இந்தத் திட்டத்தின் விளைவுகள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வேளாண் இணை இயக்குநரால் ஆய்வு செய்யப்படும்.

பனைமரம் வெட்டுவதற்கான அனுமதி குழுவில் யாா் யாா்?

பனை மரத்தை உரிய அனுமதியுடன் வெட்டுவதற்கான குழுவில் இடம்பெற்றுள்ளவா்களின் பெயா்களை வேளாண்மைத் துறை செயலா் சமயமூா்த்தி வெளியிட்டுள்ளாா்.

அவரது உத்தரவு விவரம்: பனைமரம் வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. தவிா்க்க முடியாத சூழலில் பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம். இதற்கு மாவட்ட ஆட்சியா், வருவாய் கோட்ட அலுவலா், சாா் மாவட்ட ஆட்சியா், வேளாண் உதவி இயக்குநா், காதி மற்றும் கிராம தொழிற்சாலை வாரியத்தின் உதவி இயக்குநா் ஆகியோருடன் கூடிய குழு அமைக்கப்படும். மாவட்ட ஆட்சியா் வேறு உறுப்பினரையும் இந்தக் குழுவுடன் தேவைக்கேற்ப சோ்த்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com