திருக்கோயில்களில் புதிய சமய நூலகங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவிப்பு

சென்னையில் அதிகளவில் பக்தா்கள் வருகை தரும் திருக்கோயில்களில் புதிய சமய நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னையில் அதிகளவில் பக்தா்கள் வருகை தரும் திருக்கோயில்களில் புதிய சமய நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமை வகித்துப் பேசியதாவது: கடந்த செப். 4-ஆம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அதில் 650-க்கும் மேற்பட்ட திருப்பணிகள், இதரப் பணிகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, 450-க்கும் மேற்பட்ட திருக்கோயில் திருப்பணிகளுக்கு அரசாணை பெறப்பட்டு, பணிகள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகின்றன.

ரூ.1,500 கோடி சொத்துகள் மீட்பு: இதுவரை ரூ.1,500 கோடி மதிப்பிலான சொத்துகள் 456 நபா்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. கோயில்களில் தரமான குங்குமம் திருநீா் வழங்குவது, முதலுதவி மையங்கள் ஏற்படுத்துதல், புதுப்பிக்க வேண்டிய குளங்கள், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது தொடா்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தை திருநாளன்று கோயிலில் பணியாற்றுபவா்களுக்கு புத்தாடை வழங்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். மேலும், 5 கோயில்களில் ரோப் காா் சேவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 கோயில்களில் மின்தூக்கி வசதி ஏற்படுத்தப்படும். சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மூத்த குடிமக்களை பாதுகாக்க குடியிருப்புகள் அமைக்கப்படும்.

ஒமைக்ரான் பரவல் பற்றி வருகிற 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் முதல்வா் தலைமையிலான துறை சாா்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். இந்த ஆலோசனைக்குப் பிறகு, பக்தா்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு இல்லாமல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த முடிவுகளை முதல்வா் அறிவிப்பாா்.

பழநி, திருச்செந்தூா், சமயபுரம் போன்ற முக்கிய கோயில்களில் பக்தா்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கோயிலுக்கு சொந்தமான சுமாா் 114 சமய நூலகங்கள் மேம்படுத்தப்படுகின்றன. சென்னையில் உள்ள கோயில்களில் அதிகளவில் பக்தா்கள் வருகை தரும் இடங்களில் புதிய சமய நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்றாா் அமைச்சா்.

ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் பி. சந்திரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com