தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணை: முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் ஒருநபர் ஆணையத்தில் ஆஜர்

தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைக்காக  ஒருநபர் ஆணையத்தில் ஆஜரான முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைக்காக ஒருநபர் ஆணையத்தில் ஆஜரான முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ்.

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைக்காக முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் ஒருநபர் ஆணையத்தில் ஆஜரானார்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

ஏற்கனவே நடந்த 33 கட்ட விசாரணையில் 1,031 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 1,346 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன. இந்த மாதம் தொடக்கத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 34 ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. 

இதில், முதல் நாள் விசாரணையில் நெல்லை மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளரும், தற்போதைய சென்னை குடியுரிமை பிரிவு அதிகாரியுமான அருண் சக்திகுமார் ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தார். அவரிடம் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. 
2-ஆம் நாள் விசாரணையில் ஆஜராக கோவை காவல் ஆணையர் பிரதீப்குமார், துணை காவல் ஆணையர் ஜெயச்சந்திரன், காவல் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், கோவை காவல் ஆணையர் பிரதீப்குமார், மற்றும் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு நபர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து 3-ஆம் நாள் விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் இன்று புதன்கிழமை தொடங்கியது. இந்த விசாரணையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியரும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பொறுப்பிலிருந்த மாவட்ட ஆட்சியருமான வெங்கடேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். நீதிபதி அருணா ஜெகதீசன் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்.

ஒரு நபர் ஆணையத்தின் 34 ஆவது அமர்வு இறுதிநாள் விசாரணை நாளை நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் அதிகாரியாக பணியாற்றிய வீரப்பன் ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com