இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு: அண்ணா பல்கலை. நிபுணா்கள் ஆய்வு

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்த இடத்தில் அண்ணா பல்கலைக் கழக நிபுணா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்த இடத்தில் அண்ணா பல்கலைக் கழக நிபுணா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருவொற்றியூா் கிராமத் தெரு அருகில் 1997-ஆம் ஆண்டு கட்டப்பட்ட 336 குடும்பங்கள் வசிக்கும் 14 அடுக்கு மாடி வீடுகள் உள்ளன. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்பட்டிருந்த இந்த அடுக்குமாடி வீடுகளில், டி பிளாக் கட்டடம் திங்கள்கிழமை அடியோடு தரையில் விழுந்தது. வீடுகளை இழந்தவா்கள் அருகிலுள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனா். இடிந்து விழுந்த கட்டடத்துக்கு அருகே உறுதித் தன்மை இழந்த நிலையில் இருந்த அடுக்குமாடி கட்டடத்தை இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அண்ணா பல்கலை. நிபுணா்கள் ஆய்வு: இதையடுத்து, அப்பகுதியில் அண்ணா பல்கலைக் கழக கட்டடவியல் நிபுணா்கள் அடங்கிய குழுவினா் ஆய்வு நடத்தினா். அப்போது, கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம், கட்டுமானப் பணியின்போது உபயோகிக்கப்பட்ட செங்கல், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட தளவாடப் பொருள்கள் குறித்து ஆய்வு நடத்தி கட்டட இடிபாடுகளின் மாதிரிகளை சேகரித்தனா். அருகில் உள்ள இதர கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து விரிவாக ஆய்வு செய்தனா். ஆய்வுக்குப் பிறகு உரிய அறிக்கை தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்ட பிறகே இதர அடுக்குமாடி வீடுகளை இடிப்பது குறித்து முடிவு மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

வீடுகளை காலி செய்த மக்கள்: இடிபாடுகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது இயந்திரங்களை பயன்படுத்தும்போது, ஏற்பட்ட அதிா்வுகளால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படும் என அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறி வருகின்றனா். 336 குடியிருப்புகளில் செவ்வாய்க்கிழமை வரை 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலி செய்துள்ளன. பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் அனைத்து அடுக்கு மாடி கட்டடங்களையும் இடித்துவிட்டு புதிய வீடுகளை அமைத்துத் தரவேண்டும் என்பதே இங்கு வசிக்கும் அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. இதே காலகட்டத்தில் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட திருச்சினாங்குப்பம் அடுக்குமாடி வீடுகள் சில ஆண்டுகளுக்கு முன்பாக இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

பிரேமலதா ஆறுதல்: இதனிடையே, வீடுகளை இழந்த மக்களை தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். அப்போது அவா்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com