தமிழகத்தின் தியாக தீபங்கள்- 136: ச.வெயிலுகந்த முதலியார்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடலையூர் எனும் கிராமத்தில் 1909}இல் பிறந்தவர் ச.வெயிலுகந்த முதலியார். கடலையூரில் பெரும்பகுதியினர் நெசவுத்தொழில் செய்து வந்தனர்.
தமிழகத்தின் தியாக தீபங்கள்- 136: ச.வெயிலுகந்த முதலியார்


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடலையூர் எனும் கிராமத்தில் 1909-இல் பிறந்தவர் ச.வெயிலுகந்த முதலியார். கடலையூரில் பெரும்பகுதியினர் நெசவுத்தொழில் செய்து வந்தனர்.

வெயிலுகந்த முதலியார் இளமையிலேயே விடுதலை உணர்வுடன் விளங்கியுள்ளார். 1931-இல் தூத்துக்குடியில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலில் பங்கேற்றுத் தடியடிபட்டுள்ளார். 1941 தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்று கோவில்பட்டி வட்டாரம் முழுவதும் மக்களிடம் விடுதலையுணர்ச்சியை மேம்படுத்தும் விதத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். தடையுத்தரவை மீறி நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவருடன் வேறு சிலரும் 21-8-1942-ஆம் தேதி போராட்டக் களத்தில் இறங்கினர்.

வெயிலுகந்தரின் இயக்க ஈடுபாட்டைக் கண்காணித்து வந்த காவல்துறையினர் தடையுத்தரவை மீறியதைக் காரணம் காட்டி அவரைக் கைது செய்ய முற்பட்டனர். கடலையூரில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அடுத்தநாள், 22.8.1942-ஆம் தேதி படையுடன் கடலையூர் வந்து இறங்கியது போலீஸ். ஊருக்குள் புகுந்த பின்னர் காட்டிக் கொடுக்காத மக்கள் மீது ஆத்திரமடைந்தது போலீஸ். அச்சமூட்டவும் ஊருக்குள் பீதியை உண்டாக்கவும் அங்கிருந்த மக்களை அடித்தனர், விரட்டினர். வெயிலுகந்தரைக் கைது செய்தனர். வெகுண்டெழுந்த மக்கள் காவல்துறையை ஊரைவிட்டு வெளியேறுமாறு முழக்கமிட்டனர்.

ஆவேசமடைந்த போலீஸôர் மக்களை குண்டாந்தடியால் வெறி கொண்டு தாக்கினர். மக்கள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தொடங்கியது போலீஸ். கையில் உலக்கை வைத்திருந்த கு.இராமசாமி முதலியார் மீது குண்டுபட்டு அவரின் ஆள்காட்டி விரல் துண்டாயிற்று. உலக்கை பிடியை இழந்து கீழே விழுந்தது. அதை எடுத்த மாடசாமி முதலியாரின் இடுப்பில் அடுத்த குண்டு பாய்ந்தது. அதற்கடுத்த குண்டு வி.சங்கரலிங்க முதலியாரின் அடி வயிற்றில் பாய்ந்தது. அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார். இவர் 1880-இல் பிறந்த கடலையூர் நெசவாளி. இராமசாமி முதலியார், மாடசாமி முதலியார் ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.   

அடுத்த நாள், 23.8.1942-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு போலீஸ் படை கடலையூரில் நுழைந்து ஊரை வளைத்தது. கைத்தறியில் நெய்திருந்த நூல்களை அறுத்தெறிந்தனர். பாவுகளைத் துண்டுதுண்டாக நறுக்கி எறிந்தனர். பலரை வாகனத்தில் ஏற்றி கோவில்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். வெயிலுகந்த முதலியார் ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். இராமசாமி முதலியாருக்கும் மாடசாமி முதலியாருக்கும் தலா ஆறு மாதங்களும் மீதமுள்ள 31 பேர்களில் பெரும்பாலோருக்கு ஆறு மாதங்களும் சிலருக்கு மூன்று மாதங்களும் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கல்வியறிவில்லாத கிராமப்புற மக்களும் ஈடற்ற பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர் என்பதற்கும் உயிர்களைப் பலிகொடுத்தும் ரத்தம் சிந்தியும் பெற்ற சுதந்திரம் என்பதற்கும் கடலையூர் கண்கண்ட சாட்சி.

விடுதலை இயக்கத்தில் கடலையூரை வழிநடத்திய ச.வெயிலுகந்த முதலியார் 17.3.1977-இல் 68-ஆவது வயதில் மறைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com