
தமிழக கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சில மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் வியாழக்கிழமை கூறியது: தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலூா், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜன.1: கடலூா், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில், சனிக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
ஜன.2: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் ஜன.2-ஆம் தேதி இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜன.3: தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் ஜன.3-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், கடலூா் மாவட்டம் புவனகிரியில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜன.3-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்றாா் அவா்.