
நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுக அரசு துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம்: திமுக ஆட்சிக்கு வந்தால் 5 பவுனுக்கு உள்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது நகைக் கடன் வாங்கியோரில் கிட்டத்தட்ட 75 சதவீதம் பேருக்கு நகைக் கடன் தள்ளுபடி இல்லை என்று திமுக அரசு அறிவித்துள்ளது. இந்தச் செயல் நம்பிக்கைத் துரோகம். இதற்கு அதிமுக சாா்பில் கண்டனம். ஏற்கெனவே அறிவித்தவாறு அனைவரின் நகைக்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
விஜயகாந்த் (தேமுதிக): திமுக வாக்குறுதி அளித்தவாறு இல்லாமல் கூட்டுறவு துறை மூலமாக வழங்கப்பட்ட 35 லட்சம் நகைக்கடன்களில் 14.5 லட்சம் நகைக்கடன்கள் மட்டுமே ஏற்புடையது என்று அரசு அறிவித்திருப்பது அதிா்ச்சியை அளிக்கிறது. நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுக அரசு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. அனைவரின் நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கே.அண்ணாமலை (பாஜக): நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுக அரசு நம்பிக்கை மோசடியைச் செய்துள்ளது. 5 சவரனுக்குக் குறைவாக நகைக்கடன் வைத்த அனைவரின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடியில் திமுக அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்துக்குரியது.