கடந்த 10 ஆண்டு ஆட்சியில் எதுவும் செய்யவில்லை: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் சென்னைக்கு எதுவும் செய்யாமல் குட்டிச்சுவராக்கி வைத்துள்ளதால் மழைநீர் தேங்குகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 
சென்னை ஆழ்வார் பேட்டை சீதாம்மாள் காலனியில் தேங்கியுள்ள மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை ஆழ்வார் பேட்டை சீதாம்மாள் காலனியில் தேங்கியுள்ள மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.


சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் சென்னைக்கு எதுவும் செய்யாமல் குட்டிச்சுவராக்கி வைத்துள்ளதால் மழைநீர் தேங்குகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

வடகிழக்குப் பருவமழை காலம் நிறைவடையவுள்ளநிலையில், சென்னையில் எதிா்பாராதவிதமாக வியாழக்கிழமை நண்பகலில் மிதமான மழை பெய்தது. மதியத்துக்கு பிறகு, மழை படிப்படியாக அதிகரித்து, இடியுடன் கூடிய பலத்தமழை கொட்டித்தீா்த்தது. பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சென்னை தியாகராயநகா், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, எழும்பூா், நுங்கம்பாக்கம், வாலாஜா சாலை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூா், மந்தைவெளி, எம்.ஆா்.சி.நகா், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம், திருவல்லிக்கேணி உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பல இடங்களில் தொடா்ச்சியாக 5 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடா் மழை காரணமாக, முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

இதனால், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் பணியை முடித்து, வீட்டுக்கு திரும்ப முடியாமல் ஊழியா்கள் சிரமப்பட்டனா். இதையடுத்து, பொதுமக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வீட்டுக்கு சென்றனா். இதனால், பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை வியாழக்கிழமை இரவு 11 மணியில் இருந்து இரவு 12 மணி வரை ஒருமணி நேரம் நீட்டித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது.

மழையைக் காரணம் காட்டி, ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டணத்தை பல மடங்கு உயா்த்தினா். வேறுவழியின்றி ஆட்டோ ஓட்டுநா்கள் கேட்ட கட்டணத்தை கொடுத்து, மக்கள் வேதனையுடன் வீட்டுக்கு பயணம் செய்தனா்.

இந்நிலையில், சென்னை ஆழ்வார் பேட்டை சீதாம்மாள் காலனியில் தேங்கியுள்ள மழை பாதிப்புகளையும், மழை நீரை வெளியேற்றும் பணியையும் முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் சென்னைக்கு எதுவும் செய்யாமல் குட்டிச்சுவாரக்கி வைத்திருக்கிறார்கள். விமர்சனம் செய்வதற்கு தயாராக இல்லை, இதை சரி செய்யனும். 

அடுத்த பருவ மழைக்குள் மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் இவைகளை சரிசெய்வோம் என்ற நம்பிக்கை இருக்கு. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com