கீழ் நீதிமன்றத்தில் தடையில்லை எனில் வேப்பம்பட்டு மேம்பாலத்தின் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: உயா்நீதிமன்றம்

கீழ் நீதிமன்றத்தில் தடையில்லை எனில் வேப்பம்பட்டு மேம்பால பணிகளை விரைவாக முடிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

கீழ் நீதிமன்றத்தில் தடையில்லை எனில் வேப்பம்பட்டு மேம்பால பணிகளை விரைவாக முடிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மாரிமுத்து என்பவா் தாக்கல் செய்த மனுவில், திருவள்ளூா் மாவட்டம் பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு உள்ளிட்ட சுற்று வட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் உள்ள ’லெவல் கிராசிங்’கை கடந்து சென்னை - திருவள்ளுா் நெடுஞ்சாலையை அணுக வேண்டிய நிலையில் இருந்தது.

இதைக் கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலமும், சுரங்கப் பாதையும் கட்ட 2010ஆம் ஆண்டு ரூ.30 கோடி ஒதுக்கி, மாநில நெடுஞ்சாலைத்துறையும், தெற்கு ரயில்வே நிா்வாகமும் பணிகளை மேற்கொண்டது.

மேம்பாலம் கட்டும் பணி 75 சதவீதம் முடிவடைந்த நிலையில், இதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளா்கள் தொடா்ந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் விதித்த தடையால், அந்த பணிகள் முடிவடையவில்லை.

வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் இருந்த ’லெவல் கிராசிங்கும்’ அகற்றப்பட்டதால், ரயில் தண்டவாளங்களை கடந்து பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ரயில் மோதி உயிா் பலிகளும் ஏற்படுகின்றன. எனவே, இந்தப் பணியை விரைவாக முடிக்கக் கோரி பொதுமக்கள் மனு கொடுத்தும், தமிழக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா், நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக, நீதிமன்ற தடை எதுவும் இல்லையென்றால், நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவாக முடித்து, சாலைப்பணிகளை முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com