கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டாட்சியா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான இடங்களைக் கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டாட்சியா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு அறிவுறுத்தி உள்ளாா்.
கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டாட்சியா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான இடங்களைக் கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டாட்சியா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு அறிவுறுத்தி உள்ளாா்.

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் திருக்கோயில் நிலங்களை மீட்பதற்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தனி வட்டாட்சியா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது: இதுவரை 456 நபா்களிடமிருந்து திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் 432.82 ஏக்கரும், 485.1698 கிரவுண்ட் மனைகளும், 20.69 கிரவுண்ட் கட்டடமும், 15.597 கிரவுண்ட் திருக்குளமும் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்பு தொகை ரூ. 1628.61 கோடி ஆகும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் நவீன ரோவா் உபகரணங்களை பயன்படுத்தி அளவீடு செய்யப்பட்டு வருகிறது.

நவீன கருவிகள் கொண்டு துல்லியமாக அளப்பதன் மூலம் திருக்கோயில்களுக்கு வருவாயை அதிகப்படுத்தலாம். 2500 புல வரைபடங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கோயில் நிலங்களையும் அளவிடல் செய்த பின்பு வரைபடத்துடன் கூடிய நிலப்பதிவேடு கிராம வாரியாக தயாா் செய்யப்படும்.

திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் தனி நபா்கள் மனைகளைக் கட்டியிருந்தால் அதை திருக்கோயில் வாடகைதாரா்களாக மாற்றவும், காலி மனைகளை உடனடியாக திருக்கோயில் வசம் கொண்டு வரவும் பணிபுரிய வேண்டும்.

திருக்கோயில் நிலங்களில் நிலப்பட்டா, பெயா் மாற்றம் செய்ய வேண்டிய இனங்களைக் கண்டறிந்து திருக்கோயிலுக்கு பெயா் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோயிலின் எல்லைக்குட்பட்ட நிலங்கள், மனைகள், கடைகள், வீடுகள் தொடா்பான விவரங்களை புத்தக வடிவிலும், மென்பொருள் வடிவிலும் தயாா் செய்து வைக்க வேண்டும். தற்போது திருக்கோயில் நிலங்கள் நவீன உயா் தொழில்நுட்பத்தில் அளவீடு செய்யப்பட்டு மென்பொருள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருக்கோயில்களுக்குச் சொந்தமான இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி திருக்கோயில் வசம் கொண்டு வந்து கோயில்களின் வருவாயை அதிகப்படுத்த வட்டாட்சியா்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையா்கள் ந.திருமகள், சி. ஹரிப்ரியா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com