பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பேரவைத் துணைத் தலைவரை தொடர்புபடுத்தி பேசுவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் பொதுவெளியில் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புபடுத்தி பேசுவது ஏன்? என உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் பொதுவெளியில் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புபடுத்தி பேசுவது ஏன்? என உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்தை முன்வைத்து திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். இந்த பிரசாரத்தின் போது, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாகவும், அந்த சம்பவத்தில் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை தொடர்புபடுத்தியும் சில கருத்துக்களை தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன்,சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மகன் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து பொய்யானது. இந்த பொய்யான தகவலால் சமுதாயத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே உதயநிதி ஸ்டாலின் தனக்கு மானநஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிட வேண்டும். 
மேலும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.ஆர் ராஜகோபால், உதயநிதி ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் இந்த விவகாரத்தில் பேரவைத் துணைத் தலைவரை தொடர்புபடுத்தி பேசி அவரது புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தி உள்ளதாக வாதிட்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, பேரவைத் துணைத் தலைவரையோ, அவரது குடும்பத்திரையோ குற்றம் சாட்டவில்லை.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் ஏன் பொதுவெளியில் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துக்களை பேசுகிறார் என நீதிபதி கேள்வி எழுப்பினார். எனவே இந்த வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும் வரை இத்தகைய கருத்துகளை உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்க மாட்டார் என அவரது  தரப்பில் உத்தரவாதம் அளிக்க வழக்குரைஞருக்கு உத்தரவிட்டதோடு, உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்க அறிவுறுத்தினார். வழக்குரைஞர் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் மார்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com