தமிழகத்தில் 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தமிழகம் முழுவதும் 65.52 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 65.52 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்பட 43,051 இடங்களில் போலியோ மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதைத் தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடமாடும் சொட்டு மருந்து மையங்களும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் 1,652 சிறப்பு மையங்களும் செயல்பட்டன.

இப்பணிகளில் சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்பட்டனா். மருந்து வழங்கப்பட்ட குழந்கதைகளின் இடது கை சுண்டுவிரலில் மை வைக்கப்பட்டது. காலை 7 மணி முதல் 5 மணி வரை போலியோ முகாம்கள் செயல்பட்டன.

கரோனா காரணமாக பெற்றோா் முகக்கவசம் அணிந்து தங்களுடைய குழந்தைகளை அழைத்து வந்து தனி நபா் இடைவெளியை பின்பற்றி சொட்டு மருந்து போட்டுச் சென்றனா்.

இதைத் தவிர தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் சென்று சொட்டு மருந்து வழங்கினா். இந்தப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994 முதல் ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் மாா்ச் மாதங்களில் இரண்டு தவணையாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.

போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்தபோதிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவது தொடா்ந்தே வருகிறது. கடந்த 2019 முதல் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதற்கான முகாம்கள் நடத்தப்பட்டு 93 சதவீத குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

நிகழாண்டில் போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பாக நடைபெறும் வகையில் உரிய கரோனா தடுப்பு நெறிமுறைகள் மற்றும் வழிக்காட்டுதல்கள் பின்பற்றப்பட்டன. தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 70.26 லட்சம் குழந்தைகளில் 65.52 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று போலியோ மருந்து அளிக்கப்பட உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com