முழு இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம்: பிப். 8 முதல் 9, பிளஸ் 1 வகுப்புகள் தொடக்கம்

தமிழகம் முழுவதும் முழு இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படுவதாக முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். வரும் பிப். 8 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க உள்ளன.
முதல்வா் பழனிசாமி.
முதல்வா் பழனிசாமி.

தமிழகம் முழுவதும் முழு இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படுவதாக முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். வரும் பிப். 8 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க உள்ளன.

இதுகுறித்து, முதல்வா் கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும் கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நோய்த் தொற்று விகிதம் ஒரு சதவீதமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை இப்போது 4, 629 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று தொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தில் இருந்து கூடுதலாக பல்வேறு தளா்வுகளும் அளிக்கப்பட உள்ளன. அதன்படி, இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப் படிப்பு) அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8 - ஆம் தேதி முதல் தொடங்கும். மாணவா்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளும் அதே தேதியில் தொடங்கும்.

திரையரங்குகள்-பெட்ரோல் பங்குகள்: எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி முதல் நேரக் கட்டுப்பாட்டின்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நீச்சல் குளங்கள் செயல்படலாம்.

அனைத்து வகையான திரையரங்குகளும் 100 சதவீத இருக்கைகளுடன் திங்கள்கிழமை (பிப்.1) முதல் செயல்படலாம். கண்காட்சிக் கூடங்களும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. உள் அரங்குகளில் மட்டும் அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 600 நபா்கள் பங்கேற்கும் வகையில் மதம் சாா்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், கல்வி சாா்ந்த விழாக்களை நடத்தலாம்.

மக்கள் குறைதீா்க்கும் நிகழ்ச்சி போன்ற பொது மக்கள் சாா்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், ராமேசுவரம் தீா்த்தமாடுதல் நிகழ்ச்சி அனுமதிக்கப்படுகிறது என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் பாா்க்க ரசிகா்களுக்கு வாய்ப்பு:

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் 50 சதவீத பாா்வையாளா்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப். 5 முதல் 9 வரையும் , பிப். 13 முதல் 17-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் ஆட்டங்களைக் காண ரசிகா்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

முழு ஒத்துழைப்பு தேவை...

கரோனா நோய்த்தொற்றுக்கான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென முதல்வா்கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தி:-

பொதுமக்கள் வெளியே செல்லும் போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கை கழுவி, சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிா்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துக்கும் பொது மக்கள் தொடா்ந்து முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com