அதிமுகவை மீட்டு மீண்டும் ஆட்சி அமைப்பதில் சசிகலா பங்கு இருக்கும்: டிடிவி தினகரன்

அதிமுகவை மீட்பதிலும், தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதிலும் சசிகலாவின் பங்களிப்பு முழுமையாக இருக்கும் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார். 
அதிமுகவை மீட்டு மீண்டும் ஆட்சி அமைப்பதில் சசிகலா பங்கு இருக்கும்: டிடிவி தினகரன்
அதிமுகவை மீட்டு மீண்டும் ஆட்சி அமைப்பதில் சசிகலா பங்கு இருக்கும்: டிடிவி தினகரன்

மதுரை: அதிமுகவை மீட்பதிலும், தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதிலும் சசிகலாவின் பங்களிப்பு முழுமையாக இருக்கும் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: பெங்களூருவில் இருந்து பிப்ரவரி 7 ஆம் தேதி சசிகலா வரவுள்ளார். அவருக்கு தமிழக எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவர் எதற்காக சிறை சென்றார். உண்மையான காரணம் என்ன என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும். அவர் சிறையிலிருந்து வெளியே வரும் சூழலி்ல் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையறிந்நு தமிழக மக்கள் மிகுந்த வேதனையுற்றனர்.

சசிகலாவின் வருகையை தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. அவரது வருகை தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுகவை அவர் மீட்டுடெடுப்பார். 

நான் மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் தவறு செய்தவர்களோ அவர்கள் தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். 

திமுக ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவும்,  அதிமுகவை மீட்டெடுக்கவும் அமமுகவை தொடங்கினோம்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்படி அவர் தான் பொதுச் செயலர். பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு அவருக்குத் தான் அதிகாரம் உள்ளது. ஆகவே சட்ட ரீதியாக கட்சியை மீட்போம்.

அதிமுக சட்ட விதிகளின்படி பொதுச்செயலாளர் மறைந்தாலோ அல்லது செயல்படாத நிலையிலோ தான் மற்றவர்கள் பொதுக்குழுவைக் கூட்ட முடியும்.

பொதுச்செயலாளர் மட்டுமே பொதுக்குழு தேர்தலை நடத்த முடியும். பதவி வழங்கவும் அதிகாரம் உள்ளது.

நான்கு பேர், ஐந்கு பேர், பத்து பேர் கூடி அவர்களே பதவியை நீக்குவது வேடிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக வழக்கு தொடுத்துள்ளோம். நீதிமன்றம் முடிவு செய்யும் வரை காத்திருப்போம்.

தேர்தலுக்கு அமமுக தயாராகி வருகிறது. இப்போதைய சூழ்நிலையில் சசிகலா தேர்தலில் சட்டப்படி போட்டியிட முடியாது என்றாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுப்போம். நான் தனிமைப்படுத்தப்பட்டதாக சிலர்  குட்டையை குழப்ப நினைக்கின்றனர். என்னை யாரும் தனிமைப்படுத்தவில்லை.

எங்களை குழப்ப நினைத்தவர்கள் அவர்கள் தான் குழம்பி போய் உள்ளனர். அமமுக  ஸ்லீப்பர் செல் நபர்கள் அவர்கள் பணியை சரியாக செய்வர்.  சசிகலாவை ஆதரித்து போஸ்டர் அடித்தவர்களை கட்சியிலிருந்து நீக்குவதையும், துணை முதல்வர் மகன் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்ததையும் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

தலைகீழாக நின்றாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது. திமுக என்ற தீய சக்கியை ஆட்சிக்கு வருவதை ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைவது உறுதி. அதற்கு சசிகலாவின் பங்கு இருக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com