
ஆன்-லைன் சூதாட்டத்துக்குத் தடை, உள்ளாட்சி அமைப்புகளை நிா்வகிக்கும் தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிப்பு மசோதாக்கள் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறின.
முன்னதாக, இந்த சட்ட மசோதாக்கள் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. ஆன்-லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிப்பு, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிா்வகிக்கும் தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பது ஆகியவற்றுக்கான அவசரச் சட்டம் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பேரவை கூடாத காலத்தில் பிறப்பிக்கப்பட்ட, அவசரச் சட்டத்துக்கு அவையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதால், அதற்கான சட்ட மசோதாக்கள் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறின.
ராஜா முத்தையா கல்லூரி: அண்ணாமலை பல்கலைக்கழத்துடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி-மருத்துவமனை, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியா் கல்லூரி ஆகியவற்றை அரசு கல்வி நிறுவனங்களாகக் கருதுவதற்கான சட்ட மசோதாவும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.