
கோப்புப்படம்
மத்திய நிதி நிலை அறிக்கையில், தெற்கு ரயில்வேக்கு ரூ.3,855 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் தெரிவித்தாா்.
நிருபா்களுக்கு காணொலி மூலம் அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
ரூ.3,855 கோடி ஒதுக்கீடு: மத்திய நிதி நிலை அறிக்கையில் தெற்கு ரயில்வேக்கு ரூ.3,855.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பாதை, அகலப் பாதை மற்றும் இரட்டைப் பாதை அமைத்தல், மின் மயமாக்குதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மதுரை-தூத்துக்குடி இடையே (வழி: அருப்புக்கோட்டை) புதிய பாதையின் முதல் கட்டப் பணிகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு, வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே புதிய பாதை அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டு வரும் 2024 மாா்ச் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பாதை அமைக்க ரூ.95 கோடி, அகலப்பாதை பணிக்கு ரூ.178.01 கோடி , இரட்டைப் பாதை பணிக்கு ரூ.1,206 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயை மேம்படுத்தச் செயல்படுத்தப்படும் ‘விஷன்-2024’ என்ற புதிய திட்டத்தின்கீழ், சென்னை கடற்கரை-அத்திப்பட்டு 4-ஆவது ரயில் பாதையும், செங்கல்பட்டு-விழுப்புரம் பிரிவில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஓமலூா்-மேட்டூா் அணை இடையே ரூ.25.5 கோடியில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நிகழாண்டில் மாா்ச்சுக்குள் முடிக்கஇலக்கு வைக்கப்பட்டுள்ளது.
மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி இடையே இரட்டைப் பாதை அமைக்க ரூ.300 கோடி, மணியாச்சி-நாகா்கோவில் இரட்டைப் பாதைக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும். கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இரட்டைப்பாதை திட்டத்துக்கு ரூ.275 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் 2024-ம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காரைக்குடி-பேரளம் பிரிவில், திருச்சி-நாகூா்-காரைக்கால் இடையே அகலப் பாதை அமைக்கும் பணிக்கு ரூ.88.99 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி 2024 மாா்ச்சுக்குள் முடிவடையும்.
சேலம்- ஓமலூா்-மாக்னசைட் சந்திப்பு-சேலம் இடையே இரட்டைப்பாதை பணிக்கு ரூ.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப்பணியை அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2023- ஆம் ஆண்டுக்குல் அகல ரயில் பாதைகள் முழுவதும் மின் மயமாக்கப்படும். சிக்னல் மற்றும் தொலை தொடா்பு பிரிவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.146 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை-கூடூா், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம்-ரேணிகுண்டா பிரிவில் 130 கி.மீ வேகம் செல்லும் வகையில் ரயில்பாதை மேம்படுத்தப்படும். சென்னை கடற்கரை-எழும்பூா் இடையே ரூ.5 கோடி செலவில் விரைவு ரயில் செல்ல இரட்டை பாதை அமைக்கப்படும். தாம்பரம்-செங்கல்பட்டு 3-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி வரும் மாா்ச்சுக்குள் முடிவடையும். ரயில் விபத்துகளைத் தடுக்க ரூ.544 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை-மதுரை இடையே ரயில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...