
கரோனா தொற்று பரவலுக்குப் பின்னா் திறக்கப்படும் உயா்கல்வி நிறுவனங்கள் வாரத்தில் 6 நாள்கள் செயல்படும் என உயா் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து உயா் கல்வித் துறைச் செயலாளா் அபூா்வா வெளியிட்டுள்ள அரசாணை: ‘கரோனா காலகட்டத்திற்குப் பிறகு கடந்தாண்டு டிசம்பா் மாதம் ஏழாம் தேதி, முதல்கட்டமாக இறுதியாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து வரும் 8-ஆம் தேதிமுதல் இளநிலை, முதுநிலை படிப்புகளைக் கற்பிக்கும் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் நேரடி வகுப்புகள் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
அதனடிப்படையில் நிகழ் கல்வியாண்டில் வாரத்தில் ஆறு நாள்கள் இனிமேல் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...