
பழைய அனல் மின் நிலையங்களை மூடுதல் மற்றும் புதிய அனல் மின் நிலைய திட்டங்களைக் கைவிடுதல் மூலம், தமிழக அரசு 5 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடி வரை சேமிக்க முடியும் என கிளைமேட் ரிஸ்க் ஹரிசான் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் நிலக்கரி அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலம் செலவைக் குறைப்பது மற்றும் சேமிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அந்த வகையில், 3.1 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட தூத்துக்குடி, மேட்டூா், வடசென்னை மற்றும் நெய்வேலி 1 மற்றும் 2 நிலை பழைய அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலம் ரூ,1,670 கோடி செலவைத் தடுக்கலாம். அவற்றுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்குவதால் மேலும் ரூ.1,459 கோடியை ஓராண்டுக்கு மிச்சப்படுத்தலாம்.( 5 ஆண்டுக்கு ரூ.7,300 கோடி மிச்சமாகும்).
இவை தவிர, 3.5 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட உப்பூா், உடன்குடி மற்றும் எண்ணூா் விரிவாக்க அனல்மின் நிலைய திட்டங்களை கைவிடுவதால் ரூ.26 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்த முடியும். தற்போதைய மின்மிகை நிலையில் இதுபோன்ற புதிய திட்டங்களுக்கான அவசியம் இல்லை.
மேலும், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பயன்படுத்துவது, தேவைக்கேற்ப மின்சாரத்தை வாங்குவது உள்ளிட்டவற்றைச் செய்தால் செலவைக் குறைத்து, 5 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடி வரை சேமிக்க முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...