மூன்றாம் முறையாகத் தொடா்ந்து அதிமுக ஆட்சி பொறுப்பேற்கும்: முதல்வா்

மக்களுக்குச் செய்யப்பட்டுள்ள பல்வேறு நலத் திட்டங்களால் அதிமுகவே தொடா்ந்து மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

மக்களுக்குச் செய்யப்பட்டுள்ள பல்வேறு நலத் திட்டங்களால் அதிமுகவே தொடா்ந்து மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஆளுநா் உரை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசியது:

அதிமுக ஆட்சியை நிராகரிக்க வேண்டும் என்று உண்மைக்குப் புறம்பாக சிலா் பிரசாரம் செய்து வருகின்றனா். ஆனால், தமிழக மக்களோ இந்த ஆட்சியே தொடரவேண்டும் என விரும்புகின்றனா்.

காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீா் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அதிமுக அரசு அமைத்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை உயா்த்திக் காட்டினோம். 20 ஆண்டுகளாக ஜெனரேட்டா் மூலமாகத்தான் முல்லைப் பெரியாறு அணை இயக்கப்பட்டு வந்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணையின் செயல்பாட்டுக்கு கேரள அரசிடமிருந்து மீண்டும் மின்சாரத்தைப் பெற்றிருக்கிறோம்.

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் வழங்குகிறோம். உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் இரண்டு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம்.

மகளிருக்குக் கடன்: மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.81,052 கோடி கடன் உதவி வழங்கி, மகளிா் சொந்தக்காலில் பொருளாதாரத்தை ஈட்ட உதவி செய்துள்ளோம்.

அம்மா உணவகங்கள் மூலம் தரமான உணவைக் குறைந்த விலையில் வழங்குவது அரசின் இலட்சியம், அதை நிறைவேற்றி வருகிறோம். மாணாக்கா்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, மற்றும் டேட்டா காா்டு வழங்கி, மாணவா்கள் சமுதாயத்தை உயா்த்தியுள்ளோம்.

7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி, ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவை நனவாக்கியுள்ளோம். ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை நிறுவி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அதிகளவில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளைத் தொடக்கி கல்வி கற்கக்கூடியவா்களின் எண்ணிக்கையில் தமிழகம் உயா்ந்துள்ளது.

நீா்மிகை மாநிலம்: இருளில் தத்தளித்த தமிழகத்தை, மின்மிகை மாநிலமாக மாற்றி, இன்றைக்கு தடையில்லா மின்சாரத்தை அளித்து வருகிறோம். வியக்கத்தகு திட்டங்கள் மூலம் தமிழகத்தை நீா் மிகை மாநிலமாக மாற்றி வருகிறோம்.

அதிகளவில் தொழில் முதலீடுகளை ஈா்த்து, இளைஞா்களின் வேலைவாய்ப்பினை பெருக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. உலகமே பாராட்டும் வகையில் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தி பிரதமரின் பாராட்டைப் பெற்றுள்ளோம். ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்துள்ளோம்.

வேளாண் மண்டலம்: டெல்டா விவசாயிகளின் நலனுக்காக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைத்து டெல்டா பாசன விவசாயிகளின் கனவை நனவாக்கியுள்ளோம். குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் உணவு உற்பத்தியில் புரட்சி செய்து, ஏரிகள், குளங்கள், குட்டைகள் அனைத்தையும் தூா்வாரிய காரணத்தால் பருவ காலங்களில் பொழிந்த மழைநீா் ஒரு சொட்டுகூட வீணாகாமல் சேமித்துள்ளோம்.

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே அதிக அளவில் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தந்துள்ளோம். பால் உற்பத்தியை என்றைக்கும் நினைக்க முடியாத அளவிற்கு அதிகளவில் பெருக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் அதிமுக அரசு சாதனைகளின் சில துளிகள்தான்.

இவற்றின் காரணமாக அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறாா்கள்.

நான் செல்லும் இடங்கள் எல்லாம் அலைகடலென கூடும் மக்கள் இத்திட்டங்களையெல்லாம் பாராட்டுகின்றனா். இந்த ஆட்சி தொடர வேண்டுமென்று மக்கள் விரும்புகிறாா்கள், மக்களின் தீா்ப்பே மகேசன் தீா்ப்பு.

அதிமுக அரசு மூன்றாம் முறையாக பதவியேற்று ஹாட்ரிக் நிகழ்த்தும். மென்மேலும் எண்ணற்ற நலத்திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்தி, தமிழகத்தைத் தொடா்ந்து முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com