ரிவல்டோ யானைக்கு சிகிச்சை வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவு

தும்பிக்கை துளை சுருங்கியதால் பாதிக்கப்பட்டுள்ள ரிவல்டோ யானைக்கு சிகிச்சை வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தும்பிக்கை துளை சுருங்கியதால் பாதிக்கப்பட்டுள்ள ரிவல்டோ யானைக்கு சிகிச்சை வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆா்வலா் முருகவேல் தாக்கல் செய்த மனுவில், நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் சரணாலயத்துக்குகு வெளி பகுதியான மசினக்குடி பகுதியில் உலவி வந்த ரிவால்டோ எனும் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையை வனத்துறையினா், யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனா். அப்போது வனத்துறையினா் கட்டுப்பாட்டில் இருந்த அந்த யானை, தப்பித்து மீண்டும் வாழைத்தோப்பு எனும் பகுதிக்கு திரும்பி விட்டது. எனவே வனப்பகுதியில் சுற்றித்திரியும் அந்த யானையைப் பிடிக்க வனத்துறையினருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் விஜய் பிரசாந்த், யானையின் துதிக்கை துளை சுருங்கி விட்டதால் அதற்கு சிகிச்சை அளிக்கவே அதை பிடிக்க முயற்சி செய்யப்பட்டது. ஏற்கெனவே துளை சுருங்கி உள்ள நிலையில், மயக்க மருந்து செலுத்தினால் மூச்சு திணறல் ஏற்படும். எனவே வழி முழுவதும் உணவுகள் வைத்து யானையை அழைத்து சென்றோம். யானைக்கு சிகிச்சை அளிப்பதைத் தடுக்க தொண்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. வனத்துறை ஊழியா்கள் யானையை மீட்டு சிகிச்சையளிக்க இரவும் பகலும் கடினமாக உழைத்து வருகின்றனா். சம்பந்தப்பட்ட யானையின் நிலையை நேரில் கூட பாா்க்காமல் விளம்பரத்துக்காக இது போன்ற வழக்கு தொடா்ந்துள்ளதாக கூறி யானை தொடா்பான புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், யானைக்கு சிகிச்சை வழங்குவது குறித்து தமிழக வனத்துறை 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com