
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
விழுப்புரத்தில் அமைக்கப்பட உள்ள புதிய பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பெயா் சூட்டப்பட உள்ளது.
இதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் உயா்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வா் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புப்படி சட்டத் துறை அமைச்சா் மற்றும் விழுப்புரம் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, திருவள்ளுவா் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படும் என அறிவித்தாா். விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு, அது நிகழ் கல்வியாண்டில் இருந்து செயல்படத் தொடங்கும் என அறிவித்தாா்.
இந்த அறிவிப்புக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் விழுப்புரத்தில் டாக்டா் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்ற பெயரில் புதிய பல்கலைக்கழகத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகமானது, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிச் செயல்படும். இந்தப் பரப்புகளுக்கு உட்பட்ட கல்லூரிகள், புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...