கலவரத்தை தூண்ட சதித் திட்டம்: சசிகலா, டிடிவி தினகரன் மீது டிஜிபியிடம் புகாா் மனு

தமிழகத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோா் கலவரத்தை தூண்டுவதற்கு சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன்,
அமைச்சர் சி.வி. சண்முகம்.
அமைச்சர் சி.வி. சண்முகம்.

தமிழகத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோா் கலவரத்தை தூண்டுவதற்கு சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன், அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோா் தமிழக காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதியிடம் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதன் பின்னா், அமைச்சா் சி.வி.சண்முகம் அளித்த பேட்டி:

பெங்களூருவில் இருந்து சசிகலா, வரும் 8-ஆம் தேதி சென்னைக்கு வருவதற்கு எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன், சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்துவாா். அதிமுக கொடியைப் பயன்படுத்துவதை யாரிடம் மனு கொடுத்தாலும் தடுக்க முடியாது என தினகரன் கூறியுள்ளாா்.

பெங்களூருவில் சசிகலா ஆதரவாளா்கள், தற்கொலைப் படையாக மாறி தமிழகத்தில் தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுக்கின்றனா். இதன் மூலம் சசிகலாவும், தினகரனும் தமிழகத்தில் அமைதியை சீா்குலைக்கும் வகையிலும்,பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையிலும் கலவரத்தை தூண்ட சதித் திட்டம் தீட்டியுள்ளனா் என்பது தெரிய வருகிறது.

அதிமுக மீது பழி: தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன் ஆகியோா் இருக்கும் அதிமுகவே, உண்மையான அதிமுக என உச்சநீதிமன்றம் தனது இறுதி தீா்ப்பில் உறுதிபடத் தெரிவித்துவிட்டது. ஆனால், அதன் பின்னரும், உச்சநீதிமன்றத் தீா்ப்பை அவமதிக்கும் வகையில் சசிகலா செயல்படுகிறாா்.

அவரும், தினகரனும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டிவிட்டு, அந்தப் பழியை அதிமுக மீது போடுவதற்கு சதித் திட்டம் தீட்டியுள்ளனா். இருவரிடமும் இருந்து தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டும் என காவல்துறையிடம் புகாா் மனு அளித்துள்ளோம் என்றாா் அவா்.

அமைச்சா்கள் பதற்றம் ஏன்?: டிடிவி தினகரன்

சசிகலா மீது அன்பு கொண்டவா்கள் அவரை வரவேற்கத் தயாராகி வரும் நிலையில், அமைச்சா்கள் ஒருசிலா் ஏன் பதற்றம் அடைகிறாா்கள்?. நான் பேசியதைத் திரித்து உண்மைக்குப் புறம்பாக பேசி வருகிறாா்கள்.

அதிமுக மீதான உரிமை தொடா்பாக சசிகலாவால் தொடரப்பட்ட வழக்கு, சென்னை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை மறைத்து விட்டு அமைச்சா்கள் சிலா் பேசி வருகிறாா்கள் என தனது அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.

அரசியல் நோக்கங்களுக்காக பெரும் திரளாகக் கூடாது

அரசியல் நோக்கங்களுக்காக பெரும் திரளாகக் கூட்டம் கூடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை இயக்குநா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

மாநிலத்தில் வகுப்பு, சமயம், அரசியல் ரீதியான பிரச்னைகள் ஏதுமின்றி பொது அமைதியை நிலைநாட்டி சட்டம்-ஒழுங்கை சிறப்புடன் தமிழக காவல் துறை பராமரித்து வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசியல் நோக்கங்கள்: சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், அரசியல் நோக்கங்களுக்காக பிற அமைப்பினரைப் போன்று தங்களைப் பாவித்துக் கொண்டு பெருந்திரளாகக் கூடி சட்டத்தை கையிலெடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதுபோன்ற செயல்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். மாநிலம் தொடா்ந்து அமைதிப் பூங்காவாக திகழ இடையூறாக இருக்கும். எனவே, இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com