ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகள்: ரூ.224.57 கோடியில் மேம்படுத்த முடிவு

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ரூ.224.57 கோடிசெலவில் மேம்படுத்த ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.
ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகள்: ரூ.224.57 கோடியில் மேம்படுத்த முடிவு

சென்னை: ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ரூ.224.57 கோடிசெலவில் மேம்படுத்த ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒரு லட்சத்து 7,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய ரயில் திட்டம்-2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த பட்ஜெட்டில், தெற்கு ரயில்வேயின் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3,855.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, ரூ.224 .57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்பாடு என்பது அவசியமாக இருக்கிறது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டு இதற்காக, மத்திய பட்ஜெட்டில் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.3,855.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த மட்டும் ரூ.224 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 198.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 13.35 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு ரயில் நிலையங்களில் இருக்கைகள், மின்விளக்குகள், கழிப்பிட வசதி, நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், மின்விசிறிகள், சுரங்கப்பாதைகள், நடைமேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com