ஈரோடு அருகே 2 ரௌடிகள் வெட்டிக் கொலை

பட்டப்பகலில் பிரபல ரௌடிகள் இரண்டு பேரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெட்டிக் கொலை செய்யப்பட்ட பிரபல ரௌடிகள்
வெட்டிக் கொலை செய்யப்பட்ட பிரபல ரௌடிகள்

ஈரோடு:நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய கொலை வழக்குகளில் தொடர்புடைய இளைஞர்கள் இருவர் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்தும் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த குப்புசாமி மகன் குணா என்ற குணசேகரன்(29). ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் கலை என்ற கலைச்செல்வன்(31). இவர்கள் இருவர் மீதும் ஈரோடு மாநகரில் நடந்த இரண்டு கொலை வழக்குகள் மற்றும் ஈரோடு, கோவை மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் குணசேகரனும், கலைச்செல்வனும் கொலை வழக்கு விசாரணைக்காக ஈரோடு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினர். இவர்களுடன், அதே கொலை வழக்கில் தொடர்புடைய 11பேரும் ஆஜராகி விட்டு பின்னர் அனைவரும் திரும்பினர்.

பின்னர் குணசேகரனையும், கலைச்செல்வனையும் ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் அருகே பெரியகுட்டை வீதிக்கு வரவழைத்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் முகம், இடுப்பு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் ஓட ஓட விரட்டி வெட்டி உள்ளனர்.

குணசேகரன் அங்கு இருந்த சாக்கடை கால்வாயில் குதித்து தப்பி ஓட முயன்றபோது, மயங்கி விழுந்தார். இதையடுத்து சாக்கடையில் விழுந்த குணசேகரன் மீது மர்மநபர்கள் கீழே கிடந்த கல்லை குணசேகரன் மீது போட்டு கொலை செய்தனர். இதேபோல் கலைச்செல்வனும் தப்பி சென்றபோது, ஒரு இடத்தில் தவறி வீழ, விரட்டி சென்ற மர்மகும்பல் கலைச்செல்வனையும் அரிவாளால் வெட்டி, கீழே கிடந்த கல்லை போட்டு கொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஈரோடு வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஈரோடு ஏடிஎஸ்பி கனகேஸ்வரி, டவுன் டிஎஸ்பி ராஜூ ஆகியோரும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
 

இதையடுத்து இருவரின் சடலங்களையும் மீட்ட காவல்துறை உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் குடியுருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்திருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com