பெட்ரோல், டீசல் விலை உயர்வு பகல் கொள்ளை: கே.எஸ். அழகிரி

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தி, வரலாறு காணாத பகல் கொள்ளையை மோடி அரசு நடத்தி வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பகல் கொள்ளை: கே.எஸ். அழகிரி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பகல் கொள்ளை: கே.எஸ். அழகிரி

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தி, வரலாறு காணாத பகல் கொள்ளையை மோடி அரசு நடத்தி வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை. அதற்கு மாறாக, மத்திய பா.ஜ.க. அரசு 11 முறை கலால் வரியை உயர்த்தி ரூபாய் 20 லட்சம் கோடி வருமானத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தி, வரலாறு காணாத பகல் கொள்ளையை மோடி அரசு நடத்தி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதில் எத்தகைய கொடூரமான போக்கை மத்திய பா.ஜ.க. அரசு கையாண்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள 2014 ஆம் ஆண்டு நிலவரத்தோடு 2021 ஆம் ஆண்டு நிலவரத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2014 ஜூன் மாதம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 105 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோலின் அடக்க விலை ரூபாய் 48 ஆகவும், கலால் வரி ரூபாய் 24 ஆகவும், விற்பனை விலை ரூபாய் 72 ஆகவும் இருந்தது. அடக்க விலையை விடக் கலால் வரி 50 சதவிகித அளவிலிருந்தது. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் 2021 பிப்ரவரியில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் விலை 50 டாலராகக் குறைந்தது. ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூபாய் 31 ஆகவும், கலால் வரி ரூபாய் 60 ஆகவும் உயர்ந்தது. இதனால், பெட்ரோல் விற்பனை விலை ஒரு லிட்டர் இன்று 91 ரூபாயை எட்டிவிட்டது. இதன்மூலம் அடக்க விலையில் கலால் வரி 200 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைவிட அப்பட்டமான பகல் கொள்ளை வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆனால், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்தாலோ, அல்லது 2014 நிலவரப்படி கலால் வரியை விதித்தாலோ பெட்ரோல் விலை கடுமையாகக் குறைய வாய்ப்பு இருக்கிறது. 2021 பிப்ரவரி மாதம் நிலவரப்படி, பெட்ரோலின் அடக்க விலை ரூபாய் 31. ஆனால், தற்போது விற்பனை விலை ரூபாய் 91 ஆக விற்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்த கலால் வரியை விதித்தால், பெட்ரோலை லிட்டருக்கு ரூபாய் 44 க்கு விற்க முடியும். அதேபோல, கலால் வரிக்கு மாற்றாக 28 சதவிகித ஜி.எஸ்.டி. விதித்தால், 38 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்க முடியும். ஆனால், இதை எதையுமே செய்வதற்கு மோடி அரசு தயாராக இல்லை.

2014 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 24 ஆக வரி இருந்தது. அது 2021 பிப்ரவரியில் ரூபாய் 60 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 142 சதவிகிதம் உயர்வாகும். இதனால், விற்பனை விலை 22 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் 2014 ஆம் ஆண்டில் 20 சதவிகிதமாக இருந்த கலால் வரி, 2021 ஆம் ஆண்டில் 200 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இத்தகைய கொடூரமான கலால் வரி உயர்வின் காரணமாக, மக்கள் மீது கடுமையான சுமையை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றியிருக்கிறது.

ஏற்கனவே கரோனா தொற்று காரணமாகவும், பொருளாதார வீழ்ச்சியினாலும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிற மக்கள் மீது கலால் வரியை உயர்த்திய நடவடிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும், கலால் வரி விதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய பா.ஜ.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய மக்கள் விரோதப் போக்கு தொடருமேயானால், பிரதமர் மோடி அரசு கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com