தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையரிடம்  அரசியல் கட்சிகள் வேண்டுகோள்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. 
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையரிடம்  அரசியல் கட்சிகள் வேண்டுகோள்

சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

தேசியக் கட்சிகளாக காங்கிரஸ், பாஜக, மாநிலத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒரே கட்டத் தேர்தலுக்கு ஒருசேர குரல் கொடுத்துள்ளன. தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு புதன்கிழமை காலை சென்னை வந்தது. இந்தக் குழு தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தனித்தனியாக கருத்துகளைத் தெரிவித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகள்:-

அதிமுக (தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன்): தேர்தல் ஆணையரிடம் நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தோம். ஏப்ரல் 4-வது வாரத்தில் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும். வயதானவர்கள் வாக்குச் சாவடிக்குமுடியாமல் இருந்தால் அவர்களுக்கு தபால் வாக்குகளை அளிப்பதை ஆதரிக்கிறோம்.

திமுக (அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி):  வாக்காளர் பட்டியலை சீர்படுத்தும் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினோம். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டுமெனவும், அதனை நியாயமாக முறையாக நடத்தவும் கோரிக்கை விடுத்தோம்.

பாஜக (பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்-தேர்தல் பிரிவு ஓம் பதக்): ஒரே கட்டத் தேர்தலை நடத்தக் கோரினோம். தமிழகத்தில் ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாடப்படும். எனவே, அதையொட்டி தேர்தலை நடத்தக் கூடாது.

ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டுமென தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஆர்.தாமோதரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.பெரியசாமி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகநயினார், தேமுதிக துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கோரிக்கை 
விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com