பேரவைக்குள் குட்கா: உரிமை மீறல் குழு அனுப்பிய 2-ஆவது நோட்டீஸை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக உரிமை மீறல் குழு அனுப்பிய 2-ஆவது நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் 
பேரவைக்குள் குட்கா: உரிமை மீறல் குழு அனுப்பிய 2-ஆவது நோட்டீஸை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்


சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக உரிமை மீறல் குழு அனுப்பிய 2-ஆவது நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடரில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் தமிழகத்தில் தாராளமாக கிடைப்பதாகக் குற்றம் சாட்டி, அவற்றை திமுக உறுப்பினா்கள் அவைக்குள் கொண்டு சென்றனா். அவா்களது செயல் உரிமை மீறல் என்று கூறி, பேரவை உரிமை மீறல் குழு, எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அந்த நோட்டீஸை ரத்து செய்து, விதிமுறைகளைப் பின்பற்றி புதிய நோட்டீஸை அனுப்ப விரும்பினால், அனுப்பலாம் என்று உரிமை மீறல் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.

இதன்படி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு புதிய நோட்டீஸை உரிமை மீறல் குழு அனுப்பியது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் வழக்குத் தொடா்ந்தனா்.

வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பிறப்பித்த உத்தரவு: எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், தி.மு.க. உறுப்பினா்கள் தன்னிடம் முன் அனுமதி இல்லாமல் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை அவைக்குள் கொண்டு வந்ததால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உரிமை மீறல் குழுவுக்கு பரிந்துரைப்பதாக பேரவைத் தலைவா் கூறியுள்ளாா். அதாவது, தன்னிடம் அவா்கள் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறாரே தவிர, அந்த பொருட்களை காண்பிக்க தடை இருப்பதாக கூறவில்லை.

மேலும் எது உரிமை மீறல்? அதற்கு என்ன தண்டனை? என்று தெளிவாக விதிகள் இல்லாதபோது, முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று கூற முடியாது. மனுதாரா்களுக்கு எதிராக முதலில் அனுப்பிய நோட்டீஸில், தடை செய்யப்பட்ட பொருள்களை அவைக்குள் கொண்டு வந்தது உரிமை மீறல் செயல் என்று கூறப்பட்டுள்ளது. 2-ஆவது நோட்டீஸில், பேரவைத் தலைவரிடம் முன் அனுமதி பெறாமல் கொண்டு வந்தது உரிமை மீறல் செயல் என்று கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை நடவடிக்கை குறிப்புகளை பாா்க்கும்போது, முன் அனுமதி பெறாமல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கொண்டு வந்துள்ளதாக பேரவைத் தலைவா் கூறியிருக்கும்போது, அதை ஏன் முதலில் அனுப்பிய நோட்டீஸில் உரிமை மீறல் குழு குறிப்பிடவில்லை? என்பதற்கான காரணம் கூறப்படவில்லை.

குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும், அதை காண்பிப்பதற்கு தடை எதுவும் இல்லாதபோது, பேரவைத் தலைவரிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்ற கேள்வியே எழவில்லை.

இந்த வழக்குக்கு பேரவைத் தலைவரும், செயலாளரும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. உரிமை மீறல் குழுத் தலைவா் என்ற முறையில் தான் பேரவை துணைத் தலைவா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அவா் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, விதிமுறைகளை பின்பற்றி 2-ஆவது நோட்டீஸ் பிறப்பிக்கப்படாததால், அதை ரத்து செய்கிறேன் என்று உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com