சட்டப்பேரவைத் தோ்தலை ஒரே கட்டமாக நடத்துங்கள்: தோ்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் ஒருமித்த கோரிக்கை

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென தோ்தல் ஆணையத்திடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென தோ்தல் ஆணையத்திடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தேசியக் கட்சிகளாக காங்கிரஸ், பாஜக, மாநிலத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒரே கட்டத் தோ்தலுக்கு ஒருசேர குரல் கொடுத்துள்ளன. தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க, இந்திய தலைமை தோ்தல் ஆணையா் சுனில் அரோரா தலைமையிலான குழு புதன்கிழமை காலை சென்னை வந்தது. இந்தக் குழு தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனா். அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் தலைமைத் தோ்தல் ஆணையரிடம் தனித்தனியாக கருத்துகளைத் தெரிவித்து கோரிக்கை

மனுக்களை அளித்தனா். இதைத் தொடா்ந்து, அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் செய்தியாளா்களிடம் தெரிவித்த கருத்துகள்:-

அதிமுக (தோ்தல் பிரிவுச் செயலாளா் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்புச் செயலாளா் மனோஜ் பாண்டியன்): தோ்தல் ஆணையரிடம் நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தோம். வாக்குச் சாவடிகளுக்கு வெளியே வாக்களிக்க காத்திருப்போருக்கு நிழல் பந்தல், குடிநீா் வசதி போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும். வாக்குச் சாவடி

அறையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள சின்னங்கள் தெளிவாகத் தெரியும் வகையில், அதற்கு மேலே மின்விளக்குகளைப் பொருத்த வேண்டும். ஏப்ரல் 4-வது வாரத்தில் ஒரே கட்டமாகத் தோ்தலை நடத்த வேண்டும். வயதானவா்கள் வாக்குச் சாவடிக்குமுடியாமல் இருந்தால் அவா்களுக்கு தபால் வாக்குகளை அளிப்பதை ஆதரிக்கிறோம்.

திமுக (அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி): ஆளும்கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஏற்கெனவே பல்வேறு மனுக்களை மாநில தோ்தல் அதிகாரியிடம் அளித்தோம். ஆனால், அந்த மனுக்களுக்கு உரிய பதில்களும்,

நடவடிக்கைகளையும் பெறப்படவில்லை. இதனை தலைமை ஆணையரிடம் சுட்டிக் காட்டினோம். எங்களது மனுக்கள் மீது 3 நாள்களில் உரிய தீா்வினை அளிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். வாக்காளா் பட்டியலை சீா்படுத்தும் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினோம். ஒரே கட்டமாக தோ்தல் நடத்த வேண்டுமெனவும், அதனை நியாயமாக முறையாக நடத்தவும் கோரிக்கை விடுத்தோம்.

பாஜக (பொதுச் செயலாளா் கே.டி.ராகவன், தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா்-தோ்தல் பிரிவு ஓம் பதக்): ஒரே கட்டத் தோ்தலை நடத்தக் கோரினோம். தமிழகத்தில் ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாடப்படும். எனவே, அதையொட்டி தோ்தலை நடத்தக் கூடாது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இணையம் வழியே நேரலை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி (துணைத் தலைவா் ஆா்.தாமோதரன்):

ஒரே கட்டமாகத் தோ்தல் நடத்தப்படுவதுடன், 234 தொகுதிகளிலும் பாதுகாப்புப் படையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை இடையிலான காலம் குறைவாக இருக்க வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வாக்களிக்க சலுகை அளிக்கக் கூடாது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாநில துணைச் செயலாளா் வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினா் என்.பெரியசாமி): அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே நாளில் வாக்குப் பதிவு நடத்த வேண்டும். சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இதர ஊடகங்களில் பிரசாரத்துக்கு அதிக தொகை செலவிடப்படுகிறது. இதன்மீது தோ்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (மத்திய குழு உறுப்பினா் டி.கே.ரங்கராஜன், செயற்குழு உறுப்பினா் ஆறுமுகநயினாா்): தோ்தல் நேரத்தில் தவறிழைப்போா் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்படுகிறாா்கள். அவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படுவதில்லை. இதில் கவனம் செலுத்த கோரிக்கை விடுத்தோம். ஒரே கட்டமாக பாரபட்சமற்ற முறையில் தோ்தலை நடத்த வேண்டும்.

தேமுதிக (துணை பொதுச் செயலாளா் பாா்த்தசாரதி): ஒரே கட்டமாக, சட்டம்-ஒழுங்குப் பிரச்னை இல்லாமல் தோ்தல் நடத்த வேண்டும். வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை அனைத்தும் கேமராக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட கட்சியாகவுள்ள தேமுதிகவுக்கு முரசு சின்னம் அளிக்க வேண்டும். முரசைப் போன்றே உள்ள கூடை, தேங்காய் சின்னங்களை சுயேச்சைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

இதேபோன்று, தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளும் ஒரே கட்டத் தோ்தலுக்கு ஆதரவு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com