சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தலைவர்கள் இரங்கல்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். 
மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின்.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது.  வெடி விபத்தில் அச்சங்குளம் ஏழாயிரம்பண்ணை, அன்பின் நகரம் பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக 40க்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் 8 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் 34 பேரில், சிவகாசி அரசு மருத்துவமனையில் 26 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலின்: சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இருக்கும் பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் பள்ளி மாணவி உள்பட 14 பேர் பலியாகியிருப்பது பேரதிர்ச்சியையும் பெருந்துயரத்தையும் அளிக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
உயிரிழந்தவர்களுக்கு போதிய நிவாரண உதவியை வழங்கிட வேண்டும் எனவும், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் உரிய - உயர்தர சிகிச்சை அளித்துக் காப்பாற்றிட வேண்டும் எனவும்  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ராமதாஸ்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி பட்டாசு விபத்துகள் ஏற்படும் சூழலில், அங்கு தீக்காயங்கள் மற்றும் வெடிமருந்து விபத்து காயங்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான சிறப்பு மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விசயத்தில் இனியும் தாமதிக்காமல் சிவகாசி பகுதியில் இத்தகைய சிறப்பு மருத்துவமனையை அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஜி.கே.வாசன்: தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் அவர்கள் நிவாரணம் அறிவித்திருப்பது நன்றிக்குரியது. அதே போல தமிழக அரசும்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தி.வேல்முருகன்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர்,  அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது.
விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் நடக்காத இருக்க, தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில், வருவாய்த்துறை மட்டுமின்றி பிற துறை அலுவலர்களை கொண்டு ஆய்வு நடத்த வேண்டும். விதிமீறல்கள் இருக்கக் கூடிய ஆலைகளை இயங்க தடை விதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com