தமிழகம், புதுவையில் ஒரே நேரத்தில் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர் 

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே நேரத்தில் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல அரோரா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடமாடும் தேர்தல் பிரசார வாகனத்தை தொடங்கி வைத்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா.
புதுச்சேரியில் நடமாடும் தேர்தல் பிரசார வாகனத்தை தொடங்கி வைத்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா.

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே நேரத்தில் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து புதுச்சேரியில் அரசியல் கட்சிப் பிரநிதிகள் மற்றும் அரசின் பிரநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா.

பிறகு புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல்கட்சிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அதைத்தொடர்ந்து தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினோம். 
புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 84.08 சதவீதம் வாக்குப்பதிவும், மக்களவைத் தேர்தலில் 81 சதவீதமும் பதிவானது. எழுத்தறிவு சதவீதமும், விழிப்புணர்வும் அதிகம் என்பதால் வாக்குச்சதவீதம் புதுச்சேரியில் அதிகமாக இருக்கும். எவ்வித பாரபட்சம் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் தேர்தலை நடத்துவோம். அரசியல் கட்சித்தலைவர் புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் விவகாரம், தமிழகம்-புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, வெளிநாட்டு இந்தியர்களுக்கு ஆன்லைனில் வாக்குரிமை தருவது, வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை சரிசெய்வது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர். 

நியமன எம்எல்ஏக்கள் பொருத்தவரை அரசியலமைப்புச் சட்டம் 239ஏ (1)ன்படி புதுச்சேரி சட்டப்பேரவை அமைக்கப்பட்டுள்ளது.  மக்களால் தேர்வான 30 எம்எல்ஏக்கள் தவிர மத்திய அரசு 3 நியமன எம்எல்ஏக்களை நியமிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. நியமன எம்எல்ஏக்களை நியமிப்பது, வாக்களிப்பது உள்ளிட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் மத்திய அரசு நியமன எம்எல்ஏக்களை நியமிக்கலாம் என உறுதி செய்துள்ளது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 3 நியமன எம்எல்ஏக்களுக்கும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, பட்ஜெட் ஆகியவற்றில் வாக்களிக்க உரிமை உள்ளது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக 7 நாள்கள் அவகாசம் அளித்து சரி செய்யவேண்டும். உள்ளூர் பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட்ட பிறகே சரி செய்ய வேண்டும்.  தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணைந்து இருப்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பொருத்தமாக இருக்கும். அதனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்.

கரோனாவால் அனைத்து வாக்குச்சாவடிகளும் ஒரே மாதிரியாக இருக்க அறிவுறுத்தியுள்ளோம். கரோனா காரணமாக புதுச்சேரியில் வழக்கமாக அமைக்கப்படும் 952 வாக்குச்சாவடிகளை 1,564 ஆக உயர்த்தியுள்ளோம்.  

தேர்தல் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தந்து கரோனா தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது. அதைச் செயல்படுத்த தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தியுள்ளோம். 

புதுச்சேரியிலும், தமிழகத்திலும் தற்போது மதுவிலையில் மாற்றமில்லை. அண்டை மாவட்டங்களுக்கு புதுச்சேரியில் இருந்து மது மற்றும் சாராயம் கடத்தப்படுவதை தடுக்க கிடங்குகளில் மது வகைகள், இலவச பொருள்கள், வேட்டி, சேலை, பரிசுப்பொருள்கள் ஆகியவை பதுக்கப்பட்டுள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும். 

அதற்காக கலால்துறை, மத்திய அமலாக்கத்துறை மற்றும் இது தொடர்பான துறை அதிகாரிகளிடம் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பணம், பரிசு பொருள் தந்ததற்காக தமிழகத்தில் ஒரு சில தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. பணம், பரிசுபொருள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும். 

கேரளத்துக்குச் சென்று தில்லிக்குச் சென்ற பிறகு வரும் பிப்ரவரி 16ம் தேதி மத்திய வருமானவரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஐந்து மாநில தேர்தலில் செய்ய வேண்டிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கேள்வி: தேர்தல் முடிந்து தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால் நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை தந்தால் ஒரு கட்சிக்கு சாதகம் ஏற்படும். இதனால் பாதிப்பு ஏற்படாதா?

பதில்: நியமன எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தைதான் மீண்டும் நாடி முறையிட முடியும்.

கேள்வி: சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரம் சராசரி வாக்காளர்களே உள்ளனர். அதில் 15 ஆயிரம் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விட்டால் எளிதாக வென்று தேர்தல் முடிவு ஒருதலை பட்சமாகிவிடுமே?

பதில்: வடகிழக்கு மாநிலங்களில் 200 வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் கூட உள்ளன. அங்கு பாரபட்சமில்லாமல் நேர்மையாக தேர்தலை நடத்தியுள்ளோம். புதுச்சேரியில் இது பெரிய விசயமில்லை.

கேள்வி: வேட்பாளர் செலவு தொகை அதிகரிக்கப்படுமா?
பதில்: வேட்பாளர் செலவுத்தொகை ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 22 லட்சமாக அதிகரித்துள்ளது என்று பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com