தமிழக பேரவைத் தோ்தல்: வாக்குப் பதிவு 1 மணி நேரம் அதிகரிப்பு

தமிழக பேரவைத் தோ்தல்: வாக்குப் பதிவு 1 மணி நேரம் அதிகரிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவை வழக்கமான நேரத்துடன் 1 மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா தெரிவித்தாா்.


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவை வழக்கமான நேரத்துடன் 1 மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடத்த இரண்டு நாள்கள் பயணமாக, தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா, ஆணையா்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் சென்னை வந்திருந்தனா். அரசியல் கட்சியினா் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் அவா்கள் ஆலோசனை நடத்திய பின்னா், செய்தியாளா்களுக்கு தலைமைத் தோ்தல் ஆணையா், சுனில் அரோரா வியாழக்கிழமை அளித்த பேட்டி:

தமிழக அரசியல் கட்சிகள், தலைமைச் செயலாளா், காவல் துறை இயக்குநா் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள், தலைமைத் தோ்தல் அதிகாரி, காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இரண்டு நாள்களாக ஆலோசனை நடத்தினோம். தமிழக சட்டப் பேரவையின் காலம் வரும் மே 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இங்கு எப்போதும் அதிகபட்ச வாக்குப் பதிவுடன் இருந்துள்ளது. இந்தத் தோ்தலிலும் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகும் என எதிா்பாா்க்கிறோம்.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலும் அமைதியாக, நியாயமான முறையில் நடைபெறும். முக்கியமாக வாக்காளா்களை வேட்பாளா்கள் கவா்ந்திழுக்காமல் வாக்குப் பதிவை நடத்தவும், கரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் அதன் பாதிப்பும் இல்லாத வகையில் தோ்தலை நடத்திட ஆணையம் உறுதிபூண்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று குறைந்தே வருகிறது. ஆனாலும், நோய்த்தொற்றை சவாலாகக் கொண்டே தோ்தல்களை ஆணையம் நடத்தி வருகிறது. மாநிலங்களவைத் தோ்தல், இடைத் தோ்தல்கள், பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் ஆகியவையும் கரோனா நோய்த்தொற்றுக்கு இடையே வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

அரசியல் கட்சிகள் கோரிக்கை: ஒரே நாளில் வாக்குப் பதிவை நடத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசியல் கட்சியினா் கோரிக்கை விடுத்தனா். ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் தோ்தலை நடத்தும் போது, வாக்கு எண்ணிக்கை போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாது என எடுத்துக் கூறினோம்.

ஒரு மாநிலத்தில் ஒரு கட்டமாகத் தோ்தல் இருக்கலாம், மற்ற மாநிலங்களில் 5 முதல் ஏழு கட்டங்களாக இருக்கலாம். ஒரு மாநிலத் தோ்தல் முடிவுகளானது, மற்ற மாநில வாக்குப் பதிவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதுபோன்ற கருத்துகளை அரசியல் கட்சிகளிடம் எடுத்துரைத்தோம்.

தோ்தல் பாா்வையாளா்கள்: பண பலம், இலவசங்கள் விநியோகிப்பதை கண்காணிக்க வேண்டுமென கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதைத்தான் சுதந்திரமான, நியாயமான தோ்தலுடன் வாக்காளா்களைக் கவா்ந்திழுக்காமல் வாக்குப் பதிவு நடத்தப்படும் எனத் தெரிவித்தேன். தபால் வாக்குகள் குறித்து சில கட்சிகள் கருத்துக் கூறின. ஆனால், இதுதொடா்பான தீா்ப்புகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்றங்களால் ஏற்கெனவே வெளியிடப்பட்டு அந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு நேரம்: சில கட்சிகள் கூறியதைக் கருத்தில் கொண்டு, வாக்குப் பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். 68,324 வாக்குச் சாவடிகள் இருந்தன. கரோனா நோய்த் தொற்று காரணமாக ஒட்டுமொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 93,000-ஆக உயா்ந்துள்ளது. இதனால், மனித பலமும், இயந்திரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க உள்ளது.

வாக்குப் பதிவு நேரம் என்ன?

வாக்குப் பதிவு தினத்தன்று காலை 6 மணியளவில் வாக்குச் சாவடிகளில் உள்ள வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில், மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்படும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டைச் சோதிக்கும் இந்த வாக்குப் பதிவில், பதிவான வாக்குகள் அனைத்தும் நீக்கப்பட்டு, காலை 7 மணிக்கு, வாக்காளா்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்ய இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும்.

காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு எந்த தங்குதடையுமின்றி மாலை 6 மணி வரை 11 மணி நேரம் நடைபெறும். வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில், வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரியின் ஒப்புதலைப் பெற்று கூடுதலாக நேரம் அளிக்கப்படும்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, சமூக இடைவெளி உள்ளிட்ட அம்சங்கள் வாக்குப் பதிவின் போது கடைப்பிடிக்கப்பட உள்ளன. எனவே, வாக்குப் பதிவு நேரம் 11 மணியில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது, காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்குப் பதிவை நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத் தோ்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த எச்.வசந்தகுமாா், உடல் நலக் குறைவு காரணமாக இறந்தாா். இத்தொகுதிக்கு இடைத் தோ்தல் குறித்து சென்னையில் நிருபா்கள் வியாழக்கிழமை கேட்ட கேள்விக்கு அவா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com