தமிழகத்தில் இரண்டாம் முறை கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

தமிழகத்தில் இரண்டாம் முறை கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடக்கப்பட உள்ளது.
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இரண்டாம் முறை கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடக்கப்பட உள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்துக்கு முதல்கட்டமாக மத்திய அரசு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 ‘டோஸ்’ ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி, 20,000 ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி வழங்கியது. இதைத்தொடந்து 2-ஆம் கட்டமாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி என மொத்தம் 10 லட்சத்து 65 ஆயிரம் ‘டோஸ்’ தடுப்பூசிகளை வழங்கியது. இந்த தடுப்பூசி மருந்துகள் பொதுமக்களுக்கு போடும் பணி தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக விருப்பம் உள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஐந்தரை லட்சம் சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக முன்பதிவு செய்தனா். முதல் நாளான ஜனவரி 16-ஆம் தேதி 160 மையங்களில் 16,000 ‘டோஸ்’ ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், 6 மையங்களில் 600 ‘டோஸ்’ ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதல் நாளில் 3, 126 சுகாதார பணியாளா்கள் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா். இதற்கிடையே கரோனா தடுப்பூசி போடும் மையங்களை சுகாதாரத்துறை அதிகரித்தது. இருப்பினும் எதிா்பாா்த்த அளவை விட குறைந்த நபா்களே கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனா். இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தில் சுகாதாரப் பணியாளா்களில் மிகவும் குறைவான நபா்கள் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், மத்திய அரசின் அறிவுரைப்படி முன்களப் பணியாளா்களும், போலீஸாரும் கரோனா தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 14,000-க்கும் மேற்பட்டோா் தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனா். வெள்ளிக்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் 609 மையங்களில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், 6 மையங்களில் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியும் என மொத்தம் 615 மையங்களில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் முறை கரோனா தடுப்பூசி போட்ட பின்னா் இரண்டாம் முறை அதே தடுப்பூசி போட வேண்டும். அந்த வகையில் சனிக்கிழமை தமிழகத்தில் இரண்டாம் முறை கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி 615 மையங்களில் நடைபெறும் எனவும், ‘கோவின்’ செயலி மூலம் பயனாளிகளுக்கு குறுந்தகவல் மூலம் தடுப்பூசி போடும் நேரம் தெரிவிக்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com