திமுக வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும்: வைகோ

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபட வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வைகோவிடம் தேர்தல் நிதியை அளித்த ஈரோடு எம்பி அ.கணேசமூர்த்தி மற்றும் நிர்வாகிகள்.
வைகோவிடம் தேர்தல் நிதியை அளித்த ஈரோடு எம்பி அ.கணேசமூர்த்தி மற்றும் நிர்வாகிகள்.


ஈரோடு: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபட வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதிமுக ஈரோடு மாநகர், கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டம் சார்பில் கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு எம்பி அ.கணேசமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் முருகன், குழந்தைவேலு, கந்தசாமி, குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதியை அளித்தனர்.

அதன்பிறகு வைகோ பேசியதாவது: 

"தேர்தல் நிதி வசூல் குறைந்துள்ளதாக கணேசமூர்த்தி வருத்தத்துடன் கூறினார். அதற்கு அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லை. முதல்கட்ட நிதி வசூலில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்திலேயே மதிமுக மட்டும் தேர்தல் நிதியை வசூல் செய்கிறது. மற்ற கட்சிகளுக்கு நிதி குவிகிறது. 

இதற்கு காரணம் மக்களிடம் மதிமுகவுக்கு உள்ள நம்பிக்கையை வெளிகாட்டுகிறது. மதிமுகவை சேர்ந்தவர்கள் நேர்மையானவர்கள் என்றும், தமிழர்களின் நலனுக்காக பாடுபடுபவர்கள் என்றும் மக்களுக்குத் தெரியும். இதனால் நிதியை வசூலிக்கும்போது வரவேற்று கொடுக்கின்றனர்.
 தமிழகத்தில் திமுக கூட்டணியில் நீடிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த கூட்டணி கடந்த மக்களவை தேர்தலில் இருந்தே முடிவாகிவிட்டது. திராவிட இயக்கத்தை தகர்க்க இந்துத்துவா சக்திகள் முயற்சி செய்கின்றன. இதைத்தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. சக்தியுடன் செயல்பட்டு திராவிட இயக்கத்துக்கு வலிமை சேர்க்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தற்போது பல்வேறு கட்சிகள் அணிகளை உருவாக்கி வருகின்றன. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நமது கட்சி போராட்டத்தை நடத்தியது. நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளோம். 7 பேரின் விடுதலைக்காக போராடியதுடன், அவர்களது தூக்குக்கயிறு அறுபடவும் வைத்து வெற்றி கண்டோம். 

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபட வேண்டும்" என்றார் வைகோ.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் ரூ.20.50 லட்சம், கிழக்கு மாவட்டம் சார்பில் ரூ.11.48 லட்சம், மேற்கு மாவட்டம் சார்பில் ரூ.5 லட்சம், நாமக்கல் மாவட்டம் சார்பில் ரூ. 9 லட்சம் என மொத்தம் ரூ. 45.98 லட்சம் தேர்தல் நிதியாக வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com