தவறான குற்றச்சாட்டை செல்லும் இடங்களிளெல்லாம் கூறி வருகிறார் ஸ்டாலின்: முதல்வர் 

தவறான குற்றச்சாட்டை செல்லும் இடங்களிளெல்லாம் ஸ்டாலின் கூறி வருகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

தவறான குற்றச்சாட்டை செல்லும் இடங்களிளெல்லாம் ஸ்டாலின் கூறி வருகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை, திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றி ஒரு தனி அந்தஸ்தை தந்துள்ளோம்.
அதிமுக ஆட்சியில் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்ற தவறான குற்றச்சாட்டை ஸ்டாலின் செல்லும் இடங்களிளெல்லாம் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த மாவட்டத்தையே இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கியுள்ளதை, எங்களுடைய முதலமைச்சர் செயல்படுகிறார் என்று துணிச்சலோடு நீங்கள் சொல்லலாம். திமுகவினர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கக்கூடியவர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள். தில்லுமுல்லு செய்து தேர்தலில் வெற்றி பெறலாமென்று இந்தத் தேர்தலை சந்திக்கவிருக்கிறார்கள். அதையெல்லாம் நீங்கள் முறியடித்து அம்மா அரசு தொடர பாடுபடவேண்டும்.
தேர்தல் என்ற போரிலே நம்முடைய இளைஞர் பட்டாளங்கள் எதிரிகளை வென்று கோட்டையில் மீண்டும் நம் கொடி பறக்க வேண்டும். அத்தகைய திறமை, வலிமை உங்களிடம் இருக்கிறது.
படித்த இளைஞர்களின் எதிர்காலம் சிறக்க ஜெயலலிதாவின் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 
ஜெயலலிதா, 2015-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, 2.42 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தார்கள்.
அம்மாவின் அரசும் 2019-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ஏறத்தாழ 3 இலட்சத்து 500 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்து 304 தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருவதற்கு அடித்தளமிட்டுள்ளது. இதனால், 5.50 இலட்சம் நபர்களுக்கு நேரடியாகவும், 5 இலட்சம் நபர்களுக்கு மறைமுகமாகவும் என 10.50 இலட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தது என் தலைமையிலான ஜெயலலிதாவின் அரசு.
சோதனையான கரோனா காலகட்டத்திலும் இந்தியாவிலேயே அதிகமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு. இதன் மூலம் 73 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதன் மூலம் ஏறத்தாழ 1 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நேற்றையதினம்கூட 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீட்டை ஈர்த்து 27 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் வருவதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 27 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.
இவ்வாறு படித்த இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுகிற அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது. தொழில் சிறந்தால் நாடு சிறக்கும், பொருளாதாரம் மேம்படும், வேலைவாய்ப்பு கிடைக்கும், மக்கள் செழிப்போடு வாழ முடியும்.
தென் மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்குத் தேவையான நிலம் வாங்குவதற்கு அதன் மதிப்பில் 50 சதவீதம் மானியமாக கொடுப்பதுடன், தொழில் முதலீட்டிற்கும் மானியம் கொடுக்கிறோம். இவ்வாறு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்பை உருவாக்கித் தர வேண்டுமென்ற எங்கள் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com