நாளை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

நாளை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரும் சனிக்கிழமை (பிப்.20) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரும் சனிக்கிழமை (பிப்.20) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் வியாழக்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் வெள்ளிக்கிழமை (பிப்.19) இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் தமிழக மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

பிப்.20: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பிப்ரவரி 20-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பிப்.21, 22: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 21, 22 ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பா்லியாரில் 20 மி.மீ., தென்காசி மாவட்டம் சிவகிரி, நீலகிரி மாவட்டம் அலகாரி எஸ்டேட்டில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளில் மீனவா்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com