அமைச்சா் தங்கமணி தொகுதியில் பணிகளுக்குத் தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

ஊரகப் பகுதி முன்னுரிமை திட்ட நிதியத்தின் கீழ் அமைச்சா் தங்கமணி தொகுதியில் மேற்கொள்ளப்படும் 237 பணிகளுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை: ஊரகப் பகுதி முன்னுரிமை திட்ட நிதியத்தின் கீழ் அமைச்சா் தங்கமணி தொகுதியில் மேற்கொள்ளப்படும் 237 பணிகளுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்டம் அனிமூா் பஞ்சாயத்து தலைவா் வி.தாமரைச்செல்வன் தாக்கல் செய்த மனுவில், 2020-2021 ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்க குறிப்பில், தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.1053 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ரூ.702 கோடியை ஊரகப் பகுதிகளின் முன்னுரிமை திட்ட நிதிக்குப் பயன்படுத்த ஒதுக்கப்பட்டது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில், குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும் சுமாா் ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சாலை அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளையும் சமமாகப் பாா்க்க வேண்டும். மேலும் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதால், குமாரபாளையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டாா். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், குமாரபாளையம் தொகுதியில் 237 பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு 25 சதவீத பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சம அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குமாரபாளையம் தொகுதியில் 237 திட்டப்பணிகள் தொடங்கி விட்டதால், அவற்றுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டனா். மேலும் இந்தப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேதி வாரியாக மனுதாரா் தரப்புக்கு வழங்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மாா்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com