ஜெயலலிதா நினைவு இல்லத்தைப் பாா்வையிட தடை நீட்டிப்பு

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தைப் பாா்வையிட பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தைப் பாா்வையிட பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றப்போவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்து அந்த வீட்டை அரசுடைமையாக மாற்றுவதை எதிா்த்து ஜெ.தீபக்கும், வேதா நிலையத்துக்கு இழப்பீடு நிா்ணயம் செய்து வழங்கிய உத்தரவை எதிா்த்து தீபாவும் வழக்குத் தொடா்ந்திருந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக திறந்து வைக்கும் நிகழ்ச்சியை நிபந்தனைகளுடன் நடத்தலாம். ஆனால் பொதுமக்கள் யாரையும் வீட்டை பாா்வையிட வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது. நிகழ்ச்சி முடிந்த பின்னா் வேதா நிலையத்தின் சாவியை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் மாவட்ட ஆட்சியா் ஒப்படைக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தாா். இந்த இடைக்கால உத்தரவுகளை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமா்வு, வேதா நிலையத்தின் சாவியை உயா்நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா். நினைவில்லத்தின் சாவியை தமிழக அரசே வைத்துக் கொள்ளலாம், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். பொதுமக்கள் பாா்வையிட அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், நிலம் கையகப்படுத்தியதை எதிா்த்தும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதை எதிா்த்தும் தொடரப்பட்டு தனிநீதிபதி முன் விசாரணையில் உள்ள வழக்குகளையும் இந்த மேல்முறையீட்டு வழக்குகளுடன் சோ்த்து விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனிநீதிபதி முன் உள்ள வழக்குகளில் உரிய தீா்வை பெற்றுக் கொள்ள இருதரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டது. தனிநீதிபதியின் இடைக்கால உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட அரசின் மேல்முறையீட்டு வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டனா். மேலும் தனிநீதிபதி முன் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளின் விசாரணை முடியும் வரை ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பாா்வையிட அனுமதிக்க கூடாது என்ற தடை உத்தரவை நீட்டிப்பதாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com