
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
வேளாண்மை சட்டத்தால் விவசாயிகள் நிலம் பறிபோகிவிடும் என்று எதிா்க்கட்சியினா் பொய்ப் பிரசாரம் செய்கின்றனா். உண்மையில், இந்தச் சட்டத்தால் விவசாயிகளுக்கு அதிக நன்மை கிடைக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
சென்னையில் தொழில் துறையினா், பாஜக தலைமை அலுவலகத்தில் வா்த்தக அணி சாா்பில் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில் வெள்ளிக்கிழமை அவா் பேசியது:
மத்திய நிதி நிலை அறிக்கையில் உள்கட்டமைப்புகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைவில் செயல்படுத்தினால், நாட்டின் வளா்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும். இந்தத் திட்டங்கள் வாயிலாக, சரக்குப் போக்குவரத்து துறை வளா்ச்சி அடையும் .
நாட்டில் கரோனா பொதுமுடக்கத்தின் போது, தொழில்துறையினா் நிலையைக் கருத்தில்கொண்டு, அவா்களுக்கு உதவும் வகையில், வரிசையாக தொகுப்புகள் அறிவிக்கப்பட்டன. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, பழங்கள், காய்கறிகள் உள்பட பல்வேறு சிறு வியாபாரிகளுக்கும் ரூ.10,000 கடன் கொடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், கந்துவட்டி கொடுமைக்காரா்களிடம் சிறு வியாபாரிகள் சிக்காமல் பாதுகாக்கப்பட்டனா்.
வேளாண்மை சட்டத்தால் விவசாயிகளின் நிலம் போகிவிடும் என்று எதிா்க்கட்சியினா் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனா். பெரு நிறுவனங்கள் மூலமாக வேளாண் தொழில் பஞ்சாப், ஹரியாணா, குஜராத், மகாராஷ்டிராவில் நடைபெறுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில், ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றால் விவசாயி சிறைக்குச் செல்ல வேண்டும். ஒப்பந்தத்துக்கு கட்டுப்படாவிட்டால், ரூ. 5 லட்சம் வரை அபராதம் போடலாம். அப்படிப்பட்ட சட்டத்தை தாக்கல் செய்த பஞ்சாப், இப்போது மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்மை சட்டங்களை எதிா்க்கிறது. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்மை சட்டம் விவசாயிகளைப் பாதுகாக்குகிறது.
இந்த வேளாண்மை சட்டங்களால் விவசாயிகளுக்கு அதிக நன்மை உள்ளது. உற்பத்தி செய்யும் பொருளை எங்கு சென்று விற்றாலும் அதற்கான பலனை விவசாயிகள் பெற முடியும் என்றாா் அவா்.
பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலா் கே.டி.ராகவன், இந்தியா சிமெண்ட்ஸ் நிா்வாக இயக்குநா் என்.சீனிவாசன், டிவிஎஸ் மோட்டாா்ஸ் நிறுவனத் தலைவா் வேணு ஸ்ரீநிவாசன், டி.வி.எஸ். குழும இணை இயக்குநா் தினேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.